முல்லை பெரியாறு: மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு; பேபி அணையை பலப்படுத்த அனுமதி கிடைக்குமா?

முல்லைப்பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 2014ஆம் ஆண்டு 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அணையை கண்காணித்து பராமரிப்பிற்கு மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உருவாக்கியது.‌ அதில் தமிழகம் மற்றும் கேரள மாநில பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

மதகு

தற்போது மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான இக்குழுவில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கேரள அரசின் சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே. ஜோஸ் ஆகிய மூன்று பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.‌ இந்த கண்காணிப்பு குழுவினர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 -ம் தேதியன்று அணையில் ஆய்வு செய்தனர்.

மத்திய குழுவினர்

இந்நிலையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில் நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரணியம், கேரளா சார்பில் நீர்ப்பாசனத் துறை நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகிய இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களும் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த ஐந்து பேர் கொண்ட கண்காணிப்பு குழு முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

படகில் சென்ற குழுவினர்

இதற்காக தேக்கடியில் உள்ள படகுத் துறைக்கு வந்த கண்காணிப்புக் குழுவினர் அங்கிருந்து தமிழக அரசுக்கு சொந்தமான கண்ணகி படகில் அணைக்கு பயணம் செய்தனர்.‌ கேரளப் பிரதிநிதிகள் அம்மாநிலத்திற்கு சொந்தமான படகில் சென்றனர். இதில் பிரதான அணை, பேபி அணை, மதகு பகுதி, சுரங்க பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் மதகுகளின் இயக்கி அதன் தன்மையை சரிபார்த்தும், அணையின் பலத்தை நிரூபிக்கும் சுரங்கக் கசிவு நீரின் அளவை சரிபார்த்தனர். அதோடு தற்போது நிலவும் கோடை காலம் மற்றும் எதிர் வரும் தென் மேற்குப் பருவமழை காலங்களில் முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தேக்கடி படகு குழாம்

முல்லைப் பெரியாறு அணையில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களும் கண்காணிப்பு குழுவில் இடம் பெற்ற பிறகு நடைபெறும் முதல் ஆய்வு மற்றும் 15 நாட்களுக்கு பின் நடைபெறும் கண்காணிப்புக் குழுவின் ஆய்வு என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அன்வர் பாலசிங்கம்

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். ''பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தெளிவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கிய பின்னரும், அதே உச்சநீதிமன்றம் ஒரு கண்காணிப்பு குழுவையும் அமைத்து,அவ்வப்போது அணையை பார்வையிட்டு கண்காணிக்க, அமைத்திருப்பதே அடிப்படைத் தவறு.

உச்சநீதிமன்றத்தால் கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்ட பிறகு, முதல் முதலாக அணைப் பகுதிக்கு வருகிறது மத்திய கண்காணிப்பு குழு. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் குல்ஷன் ராஜ் தலைமையில் வரும் இந்தக் குழுவில், தமிழக விவசாயிகளின் நம்பிக்கைக்கு உகந்த பொறியாளரும், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவருமான சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.

அணை

அதுபோல கேரளாவின் சார்பில் கலந்து கொள்ளும் இருவரில் ஒருவரான, நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.ஜோஸ் தான், பெரியாறு பிரதான அணையிலிருந்து பேபி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு உத்தரவிட்ட அமர்வின் தலைவர். அதுபோல அங்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நீர்ப்பாசன நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீசும் உள்ளார். இந்த ஆய்வின் முடிவில் பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் 23 மரங்களை வெட்டுவதற்கு உத்தரவிடுவார்கள். 40 ஆண்டு கால பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என நம்புகிறோம்'' என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/lpaMFi6

Post a Comment

0 Comments