மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வசிப்பவர் சுபம் தீட்ஷித்(27). இவர், தான் வசித்த கட்டடத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். பின்னர், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் சென்று தனது காதலை தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்தப் பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அதோடு அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடந்திருக்கிறது. இதனால் கோபமடைந்த தீட்ஷித், அந்தப் பெண்ணை பழிவாங்க வீட்டுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் ஸ்கூட்டருக்கு தீவைத்தார். ஸ்கூட்டர் வீட்டுக்கு மிகவும் அருகில் நிறுத்தப்பட்டிருந்ததால், தீ மளமளவென அந்தப் பெண் வசித்த கட்டடத்துக்குப் பரவியது.
அதிகாலை 3 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்ததால், இரண்டு மாடிகள் கொண்ட அந்தக் கட்டடத்தில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். இதனால் அவர்களால் தீவிபத்தின் போது தப்பிச்செல்ல முடியவில்லை. தீவிபத்து குறித்து கேள்விபட்டு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனால், அதற்குள் கட்டடத்துக்குள் இருந்த 7 பேர் உடல் கருகி இறந்துவிட்டனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். தீவிபத்துக்கு என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்ள கட்டடத்துக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், தீட்ஷித் ஸ்கூட்டருக்கு தீவைப்பது தெளிவாக பதிவாகியிருந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியபோதுதான், அந்தக் கட்டடத்தில் வசிக்கும் பெண் காதலை ஏற்க மறுத்ததால் தீவைத்ததாக தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, போலீஸார் அவர் மீது கொலைக்கு நிகரான வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/aRC8cEM
0 Comments