விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.12.55 லட்சம் அபராதம்!

கேரள மாநிலம் கொல்லம் நிலமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஸ்மயா(24). பந்தளம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றுகொண்டிருந்த சமயத்தில் விஸ்மயாவுக்கும் மோட்டார் வாகன ஆய்வாளரான கிரண்குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. 2020-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி கணவர் வீட்டில் பாத்ரூமின் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார் விஸ்மயா. திருமணத்தின்போது நூறு சவரன் தங்க நகைகள், 120 செண்ட் நிலம், சொகுசு கார் ஆகியவை வரதட்சணையாக வழங்கப்பட்டன. வரதட்சணையாக வழங்கிய கார் அதிக மைலேஜ் கொடுக்கவில்லை எனக்கூறி கிரண்குமார் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாக விஸ்மயா உறவினர்களிடம் கூறியிருக்கிறார். மேலும் தங்கள் மகளின் மரணத்துக்குக் காரணம் அவர் கணவர் கிரண்குமார்தான் என விஸ்மயாவின் பெற்றோரான திரிவிக்கிரமன் நாயர் - ஸஜிதா ஆகியோர் தெரிவித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கிரண்குமாரைக் கைதுசெய்தனர்.

விஸ்மயா

வரதட்சணை கொடுமையால் மருத்துவக் கல்லூரி மாணவி உயிர் பறிபோன சம்பவம் கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. வரதட்சணையைக் கண்டித்து முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் வரதட்சணைக்கு எதிராக அரசே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு விஸ்மயா விவகாரம் விஸ்வரூபமானது. விஸ்மயா மரண வழக்கு கொல்லம் ஒன்றாம் அடிஷனல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்துவந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுஜித், விஸ்மயாவின் கணவர் கிரண்குமார் குற்றவாளி என அறிவித்தார். இந்த வழக்கில் தண்டனை இன்று வழங்கப்படும் எனவும் நீதிபதி கூறியிருந்தார்.

நீதிபதி இன்று வழங்கிய தீர்ப்பில் வரதட்சணை கொடுமைக்காக கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தற்கொலைக்குத் தூண்டியதற்காக 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத் தொகை செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் கூடுதலாகச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், குடும்ப வன்முறை குற்றத்துக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஐம்பதாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, வரதட்சணை தடைச்சட்டம் பிரிவு 3-ன் கீழ் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பத்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையைச் செலுத்தத் தவறினால் 18 மாதங்கள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் வரதட்சணை தடைச்சட்டம் பிரிவு 4-ன் கீழ் ஓராண்டு சிறையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கிரண்குமார் - விஸ்மயா

சிறைத் தண்டனையை ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதால், கிரண்குமாருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தம் 12.55 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையில் இரண்டு லட்சம் ரூபாய் விஸ்மயாவின் பெற்றோருக்கு நஷ்டஈடாக வழங்க வெண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தீர்ப்புக்குப் பிறகு கிரண்குமாரிடம் எதாவது கூற விரும்புகிறீர்களா என கோர்ட் கேட்டது. அதற்குத் தலை குனிந்தவாறே பதில் கூறிய கிரண்குமார், "என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லை. அப்பாவுக்கு ஞாபக மறதி இருப்பதால், திடீரென எதாவது நடக்கும் அபாயம் உண்டு. குடும்பத்துக்கு நான் ஒரே ஆதாரம் என்பதால், என் வயதையும் கருத்தில் கொள்ளவேண்டும்" எனக் கூறினார்.

இதே கருத்தை நேற்றும் கோர்ட்டில் கூறிய கிரண்குமார் தரப்பு, கிரிமினல் வழக்கில் அவர் ஈடுபடவில்லை என்றும் கூறியிருந்தது. ஆனால், ``இது தனிப்பட்ட நபருக்கு எதிரான வழக்கு இல்லை. வரதட்சணை என்ற சமூக கொடுமைக்கு எதிரான வழக்கு. அரசு ஊழியரான கிரண்குமாருக்கு வரதட்சணை ஒன்றே நோக்கமாக இருந்தது. எனவே விஸ்மயாவின் தற்கொலை என்பது கொலைக்குச் சமமானது. இந்த வழக்கின் தீர்ப்பு சமூகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்" என அரசு தரப்பு வாதிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/GIB9gnd

Post a Comment

0 Comments