``விழாக்காலங்களில் பேசிக்கொள்வோம்..!" - தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதை உறுதிசெய்த மருமகன்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அரசு தங்களது நாட்டில் தாவூத் இப்ராஹிம் இல்லை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. தாவூத் இப்ராஹிம் மட்டுமல்லாது அவன் கூட்டாளிகளும் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் முக்கிய நகரங்களில் தாக்குதலை நடத்தி வன்முறையை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறி தேசிய புலனாய்வு ஏஜென்சி தாவூத், அவன் கூட்டாளிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து மும்பை உட்பட முக்கிய இடங்களில் ரெய்டு நடத்தியது. அமலாக்கப் பிரிவும் இந்த ரெய்டில் கலந்துகொண்டு தாவூத் இப்ராஹிமுக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தியது.

தாவூத் இப்ராஹிம்

இவ்வாறு விசாரிக்கப்பட்டவர்களில் தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்கரின் மகன் அலிஷா பார்கரும் ஒருவர். அவர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ``தாவூத் இப்ராஹிம் என்னுடைய மாமா. அவர் 1986-ம் ஆண்டு வரை மும்பை தாம்பர்வாலா கட்டடத்தின் நான்காவது மாடியில் வசித்தார். இப்போது பாகிஸ்தானில் இருப்பதாக என் உறவினர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் செல்லும்போது நான் பிறக்கவேயில்லை. நானோ அல்லது என் குடும்ப உறுப்பினர்களோ தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு வைத்துக்கொண்டதில்லை. பக்ரீத், ரம்ஜான் போன்ற விழாக்காலங்களில் மட்டும் என் அத்தை மெஜாபீன் தாவூத் இப்ராஹிம், மாமா தாவூத் ஆகியோர் என் மனைவி ஆயிஷாவையும், சகோதரிகளையும் தொடர்புகொண்டு வாழ்த்து சொல்வதுண்டு" என்று தெரிவித்தார்.

தாவூத் இப்ராஹிமை ஐநா சபை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்திருக்கிறது. தற்போது தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் மும்பையில் போதைப்பொருள் கடத்தல், ஹவாலா மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/GfD8Adt

Post a Comment

0 Comments