மும்பை, விலே பார்லேயில் உள்ள மித்திபாய் கல்லூரியில் படித்து வரும் 21 வயது மாணவி கல்லூரியில் நடந்த தேர்வில் கலந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார். அவர் ரயில் நிலையம் அருகில் உள்ள நடை மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருக்க, அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் மாணவியைப் பார்த்து சைகை செய்திருக்கிறார். அதைக் கண்டுகொள்ளாமல் அம்மாணவி செல்ல முயன்றிருக்கிறார். அந்நேரம் அந்த நபர் திடீரென தனது பேன்ட்டை அன்ஸிப் செய்து மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். மேலும், அவர் அருகில் செல்ல முயல, அதிர்ச்சியடைந்த அம்மாணவி அந்த நபரை பிடித்து அடித்திருக்கிறார்.
மாணவி அந்த நபரை பல முறை அடித்ததோடு, அவரது சட்டை காலரை பிடித்தபடியே போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில், அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய அந்த வழியாகச் சென்ற யாரும் முன் வரவில்லை.
இது குறித்து அம்மாணவி கூறுகையில், `என்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபரை பிடித்து வைத்துக்கொண்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தேன். 10 நிமிடமாக யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை. 10 நிமிடத்திற்கு பிறகு முதியவர் ஒருவர் என்னிடம் என்ன நடந்தது என்று கேட்டார். நடந்த சம்பவத்தை சொன்னவுடன், குற்றவாளி அங்கிருந்து தப்பிச் செல்லாமல் தடுத்து நிறுத்த உதவி செய்தார். போலீஸார் வந்தவுடன் குற்றவாளியை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு போலீஸ் நிலையத்திற்கும் சென்று எழுத்துபூர்வமாக புகார் செய்தேன்' என்றார்.
மாணவியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபர் சந்தோஷ் சங்கர் என்றும், அவர் ஒரு போதைப்பொருள் பயன்படுத்தும் ஆசாமி என்றும் தெரிய வந்தது. கடந்த ஜூன் மாதமும் இதே மாணவிக்கு வகோலாவில் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்க, அப்போதும் இம்மாணவி குற்றவாளியைப் பிடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு மற்றவர்கள் உதவ முன் வராததால், அம்மாணவியால் குற்றவாளியை போலீஸாரிடம் ஒப்படைக்க முடியவில்லை. குற்றவாளி மாணவியை அடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டார். இந்த முறை, மீண்டும் தைரியமாகச் செயல்பட்டு குற்றவாளியை போலீஸிடம் ஒப்படைத்திருக்கும் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/QmlzA9Z
0 Comments