ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் என்று சொன்ன முக்கிய சாட்சி திடீர் மரணம்!

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையிலிருந்து கோவாவிற்குச் சென்ற கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட போது அவரை விடுவிக்க ஷாருக் கானின் மேலாளர் பணபரத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கிரண் கொஷாவி என்பவர் இந்த பண பேரத்தில் ஈடுபட்டதாக கிரணின் பாதுகாவலர் பிரபாகர் சாகில் குற்றம்சாட்டியிருந்தார். கிரணும், ஷாருக் கான் மேலாளரும் பேசியதைத் தான் ஒட்டுக்கேட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரபாகரைப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகச் சேர்த்துள்ளனர். இந்த நிலையில், பிரபாகர் திடீரென மரணமடைந்துவிட்டார். அவர் மும்பை செம்பூரில் வசித்து வந்தார். அவருக்கு வீட்டில் திடீரென நேற்று மாலையில் மாரடைப்பு ஏற்பட்டது.

ஆர்யன் கான்

உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். கடந்த சில நாள்களுக்கு முன்புதான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரிகள் டெல்லியிருந்து வந்து பிரபாகரிடம் வாக்குமூலம் வாங்கிவிட்டுச் சென்றதாகப் பிரபாகர் வழக்கறிஞர் குறிப்பிட்டார். பிரபாகரின் மறைவு இந்த வழக்கில் முக்கிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பிரபாகர்

இதற்கிடையே போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆர்யன் கான் வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யச் சிறப்பு நீதிமன்றம் 60 நாள்கள் அவகாசம் வழங்கியிருக்கிறது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 90 நாள்கள் அவகாசம் கொடுக்கும்படி சிறப்பு நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டனர். அதையடுத்து நீதிமன்றம் 60 நாள்கள் அவகாசம் வழங்கியது. போதைப்பொருள் வழக்குகளில் 180 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும். ஆனால் ஆர்யன் கான் வழக்கில் 180 நாள்களுக்குள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யமுடியவில்லை.



from தேசிய செய்திகள் https://ift.tt/pBR7ziw

Post a Comment

0 Comments