பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்திற்கு நிலத்தடி நீர் ஆதாரங்களை நம்பியே உள்ளனர். ஆனால் சிறு, குறு விவசாயிகளால் செலவு செய்து தங்கள் நிலங்களில் ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) அமைத்துக்கொள்ள முடிவதில்லை. எனவே, அரசே ஆழ்துளை கிணறுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர அரசு தங்கள் மாநில விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை பரிசீலித்து, அவர்களுக்கு இலவசமாக ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை 2020-ல் அறிவித்தது.
விவசாயிகளுக்கான இலவச போர்வெல் திட்டத்திற்குப் பெயர் ஒய்.எஸ்.ஆர் ஜலகலா திட்டம் ( YSR Jala Kala scheme). ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க, விவசாயிகள் அதற்கு எதிர்பார்ப்புடன் விண்ணப்பித்தனர். இதன் மூலம், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1.72 லட்சம் விண்ணப்பங்களில் இருந்து முதற்கட்டமாக 11,000 ஆழ்துளைக் கிணறுகள் 371 மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆந்திர அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில், ``நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் பெறப்பட்ட 2.08 லட்சம் விண்ணப்பங்களில் சுமார் 1.72 லட்சம் விண்ணப்பங்களுக்கு அரசு அனுமதி அளித்தது. ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனம் நிலத்தடி நீரை கணக்கெடுத்து, சுமார் 34,726 விண்ணப்பங்களைத் தேர்வு செய்தது. தற்போது 11,000 போர்வெல்களை 371 மண்டலங்களில் அமைத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், தண்ணீர் நன்றாகக் கிடைக்கும் என்று நம்புகிறோம். மேலும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், கோடை காலத்திலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். அடுத்தகட்ட போர்வெல் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்" என்று கூறியுள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துக் கொடுக்கும் ஆந்திர அரசின் இந்த முன்னெடுப்பை குறித்தும், தமிழகத்தில் இது போன்ற திட்டம் செயல்படுத்தலாமா என்பது குறித்தும் மூத்த பொறியாளர் முனைவர் வீரப்பனிடம் பேசியபோது, "சுமார் 30 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டது. எல்லா மாவட்டங்களிலும் குறிப்பாக மேற்கு மாவட்டங்களின் பகுதிகளில் போர்வெல் 1000 அடிக்கு மேல் நிலத்தடி நீரை உரிஞ்சு எடுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில் 30 மாவட்டத்திற்கும் மேலே நிலத்தடி நீரை தேவையை விட அதிகமாகவே எடுத்தாயிற்று. இந்த நிலையில் தமிழக அரசு ஆந்திராவை போல பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் ஜல ஏக்னா என்ற திட்டத்தின் மூலம் நீர் பாசன திட்ட வசதிகளை செய்துள்ளனர். அவர்கள் இலவச மின்சாரம் கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதனால் அங்கே போர்வெல் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். மேற்பரப்பு நீரையே அவர்கள் உபயோகித்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் நிலைமைக்கும் ஆந்திராவிற்கும் வித்தியாசம் உண்டு. யுனெஸ்கோவில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22-ம் தேதியை 'உலக தண்ணீர் தின'மாக கொண்டாடுகின்றனர். இந்த வருடத்திற்கான கருப்பொருளே Groundwater: Making the Invisible Visible என்பதே.
தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் நிலை மோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் இது போன்ற திட்டத்தைத் செயல்படுத்த தேவையில்லை'' என கூறினார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/e4GzUlH
0 Comments