உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளரும், அந்தக் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ-வும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் இந்தச் சந்திப்பை விமர்சித்திருந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ``பா.ஜ.க மாயாவதியைக் குடியரசுத் தலைவராக்க விரும்புகிறதா என்பதை இப்போது பார்க்க வேண்டும்" என்று மாயாவதியை விமர்சித்திருந்தார். அகிலேஷின் இந்த கூற்றுக்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ``நான் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று கனவு காணமாட்டேன். ஏனெனில் நான் போராட்டத்தையே விரும்புகிறேனே தவிர... நிம்மதியான வாழ்க்கையை அல்ல. மீண்டும் நான் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் ஆகவே கனவு காண்கிறேன்'' என்று நேற்றே பதிலளித்திருந்தார். இந்த நிலையில், அகிலேஷை விமர்சிக்கும் வகையில் மாயாவதி தன் ட்விட்டரில் இன்று கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.
அதில் மாயாவதி, ``உத்தரப்பிரதேசத்தில், முஸ்லிம் மற்றும் யாதவ் சமூகத்தினரின் முழு வாக்குகளைப் பெற்று, பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பிறகும் கூட, சமாஜ்வாடி கட்சித் தலைவர் தன்னுடைய முதல்வர் கனவை நிறைவேற்ற முடியாத நிலையில், மற்றவர்களின் பிரதமர் கனவை எப்படி நிறைவேற்ற முடியும்?
கடந்த லோக்சபா பொதுத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி அவருடன்(அகிலேஷ்) கூட்டணி வைத்த பிறகும், அவரே 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற பிறகு, பகுஜன் சமாஜ் தலைவர் எப்படி பிரதமராவார்? எனவே இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான அறிக்கைகளை வெளியிடுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/biV51uH
0 Comments