நேற்று ம.பி., இன்று டெல்லி: இஸ்லாமிய மக்களை அச்சுறுத்தும் பாஜக-வின் புல்டோசர் அரசியல்?!

ஒரு பெரும்பான்மை மதத்தினர் ஊர்வலம் நடத்துகின்றனர். அவர்கள், சிறுபான்மை மதத்தவர்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக ஊர்வலம் செல்லவேண்டாம் என காவல்துறையால் அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், அறிவுறுத்தலையும்மீறி ஊர்வலம் நடக்கிறது. சரியாக சிறுபான்மை மதத்தவர்களின் வழிபாட்டுத்தலம், வீடுகளை நெருங்கியவுடன் வன்முறை வெடிக்கிறது. இரண்டுதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள, அந்த இடமே போர்க்களமாகிறது. அடுத்த சில நாள்களில், அரசாங்க அதிகாரிகளால் முன்னறிவிப்பின்றி, கலவரம் நடந்த பகுதியில் வசித்த சிறுபான்மை மதத்தவர்களின் வீடுகள், கடைகள் புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்படுகிறது. அரசாங்கத் தரப்பின் விளக்கமோ, ``ஆக்கிரமிப்பு வீடுகளை மட்டும்தான் அகற்றுகின்றோம்; இதில் அரசியல் இல்லவே இல்லை!" என்கிறது. ஒரு மாநிலத்தில் நடந்தால் எதேச்சையாக நடந்தது என்றுகூட கூறி சமாளிக்கலாம், ஆனால் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அடுத்தடுத்து காட்சிப்பிழையின்றி இதேபோன்ற``புல்டோசர் மாடல் அரசியல்" அரங்கேற்றப்பட்டுவருகிறது. என்ன தான் நடக்கிறது?

புல்டோசர் அரசியல்

ராம நவமி ஊர்வலமும் ம.பி. வன்முறையும்:

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, ராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் இந்துத்துவ அமைப்பினர் ஊர்வலங்கள் நடத்தினர். இந்த ஊர்வலத்தின்போது பல்வேறு மாநிலங்களில் இந்துக்கள்- இஸ்லாமியர்கள் இடையே கடுமையான மோதல் வெடித்தது. குறிப்பாக, பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் மத்தியப்பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களின் வீடுகள், கடைகள், மற்றும் காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, சிறுவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், அடுத்த சில நாள்களிலேயே, வன்முறை நடந்தப் பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் என அனைத்தையும் மாநில அரசு இடித்து தரைமட்டமாக்கியது. மேலும், இடிக்கப்பட்டவற்றில் சில வீடுகள் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை என்பது கூடுதல் தகவல். இதுகுறித்து அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டபோது, `ஆக்கிரமிப்புதான் அகற்றப்பட்டது' என கூலாக பதிலளித்தது.

அனுமன் ஜெயந்தி ஊர்வலமும் டெல்லி கலவரமும்:

ராம நவமி நாளில் நடைபெற்றதைப் போலவே, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நடத்தப்பட்ட அனுமன் ஜயந்தி ஊர்வலத்திலும் பல்வேறு மாநிலங்களில் இரு தரப்பினரிடையே மோதல் நிகழ்ந்தது. குறிப்பாக, பா.ஜ.க கட்டுப்பட்டில் இருக்கும் டெல்லியின் வடக்கு மாநகராட்சி ஜஹாங்கிர்புரி எனும் இடத்தில் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது, இந்துக்கள்-இஸ்லாமியர்கள் இடையே வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் கற்களாலும் கட்டைகளாலும் தாக்கிக்கொண்டனர். கலவரத்தைத் தடுக்க முயன்ற காவல்துறையினர் பலரும் படுகாயமடைந்தனர். இந்த கலவரத்தில் முதல்கட்டமாக, 5 இஸ்லாமியர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். மேலும், சிறுவர்கள் உட்பட மொத்தம் 23 பேர் இந்த இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டனர்.

டெல்லி கலவரம்-ஜஹாங்கிர்புரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில நாள்களிலேயே, ஜஹாங்கிர்புரி பகுதியின் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் பா.ஜ.க அதிகாரத்திலிருக்கும் டெல்லி வடக்கு மாநகராட்சி இறங்கியது. பாதுகாப்புக்காக சுமார் 1500 காவல்துறையினர் ஜஹாங்கிர்புரியில் குவிக்கப்பட்டு, மாநகராட்சியின் 14 அதிகாரிகளின் முன்னிலையில், 9 புல்டோசர்களை வைத்து, குடியிருப்புகள், கடைகள் என அனைத்தையும் வலுக்கட்டாயமாக இடித்து அகற்றினர். எந்தவிதமான முன்னறிவிப்புகளும், நோட்டீஸ்களும் வழங்கப்படாமல் மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து நடுத்தெருவில் பரிதவித்தனர்.

பிருந்தா காரத்

தடை விதித்த உச்ச நீதிமன்றம்:

இந்தநிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றம் எனும் பெயரில் ஜஹாங்கிர்புரியில் வீடுகள் இடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜஹாங்கிர்புரி வீடுகளை அகற்ற தடை விதித்தது. மேலும், இந்த தடை உத்தரவு அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, தொடர்ந்து இரண்டுமணி நேரம் வீடுகள் இடிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்தது. இதையறிந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் நீதிமன்ற உத்தரவு நகலுடன் நேரடியாக இடத்திற்குச் சென்று தடுத்து நிறுத்தினர்.

குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள்:

இவை அனைத்தும், அப்பட்டமாக இஸ்லாமியர்களுக்கு எதிரான பா.ஜ.க அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகள் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கிறன. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ``அரசு ஆதரவுடன் ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைக்கும் நடவடிக்கை" என விமர்சித்திருக்கிறார்.

காங்கிரஸ் பொதுச்செயலார் அஜய் மேகன், ``நான் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக இருந்துள்ளேன். சட்டங்கள் என்ன என்பது எனக்குத் தெரியும். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது. இந்த இடிப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது. இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பொய் சொல்கிறார்கள்" என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல், ``ஜஹாங்கிர்புரியின் ஒரு தரப்பினர் குறி வைக்கப்படுகின்றனர்" என வெளிப்படையாகக் கூறினார். மேலும், ஆம் ஆத்மி கட்சி, ``ஜஹாங்கிர்புரி வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி அன்சார் பா.ஜ.க பிரமுகர்" என புகார் தெரிவித்திருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/tIm9F7E

Post a Comment

0 Comments