`ரூ.13 லட்சம் பரிசு’... வீட்டுக்கு வந்த கடிதம்! - மும்பை பெண் ரூ.12 லட்சத்தை இழந்தது எப்படி?

ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. அதனை தினம் தினம் படித்தாலும், படித்தவர்களே ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்படுகின்றனர். மும்பை பாந்த்ரா பகுதியை சேர்ந்த வைசாலி தேஷ்முக்(37) என்ற பெண்ணுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்தது. அக்கடித்தில் வைசாலிக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த வைசாலிக்கு மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. அக்கடிதத்தில் கஸ்டமர் கேர் எண் என்று கூறி மொபைல் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நம்பருக்கு வைசாலி போன் செய்து அவருக்கு கடிதம் வந்திருக்கும் விபரத்தை தெரிவித்தார்.

சித்தரிப்புபடம்

உடனே போனில் பேசிய நபர், ஆன்லைனில் பொருள்களை விற்பனை செய்தவர்களின் பட்டியலை தேர்வு செய்து இந்திய அளவில் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டதாகவும், அதில் நீங்கள் 13 லட்சம் பரிசு பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு பரிசுப்பணத்தை பெற வரி, ரிசர்வ் வங்கி கட்டணம், செக்யூரிட்டி டெபாசிட், பிராஸசிங் கட்டணம் போன்றவற்றை செலுத்தவேண்டும் என்று போனில் பேசிய நபர் தெரிவித்தார்.

கடந்த 17-ம் தேதி முதலில் 12,500 ரூபாயை டிரான்ஸ்பர் செய்யும்படி போனில் பேசிய நபர் வைசாலியிடம் தெரிவித்தார். அதன் பிறகு 27,300 ரூபாய் அனுப்பும் படி கூறினார். அப்பெண்ணும் கேட்க கேட்க பணத்தை அனுப்பிக்கொண்டே இருந்தார். மொத்தம் ரூ.6.44 லட்சம் அளவுக்கு வைசாலி அனுப்பிவிட்டார். கடைசியாக கடந்த 20-ம் தேதி வைசாலி மீண்டும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த நம்பருக்கு போன் செய்தார்.

போனில் பேசிய நபர் பரிசுப்பணத்தை உடனே அனுப்புவதாகவும், அதற்கு முன்பு 5.06 லட்சம் ரிசர்வ் வங்கி கட்டணத்தை செலுத்தும்படி கூறினார். உடனே அப்பெண் அந்த பணத்தை அனுப்பி வைத்தார். அப்படியும் பரிசுப்பணம் வைசாலிக்கு வந்து சேரவில்லை. அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டது வைசாலிக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீஸில் புகார் செய்தார் வைசாலி. 14 தவணைகளில் வைசாலி இப்பணத்தை அனுப்பி இருந்தார். வைசாலி எந்த வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பினார் என்ற விபரத்தை சேகரிக்கும் பணியில் சைபர் பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

21 லட்சத்தை இழந்த தொழிலதிபர்

இதே போன்று ஒரு ரூபாயில் சலுகை கிடைப்பதாக நம்பி மும்பை தொழிலதிபர் ரூ.21 லட்சத்தை இழந்துள்ளார். மும்பையை சேர்ந்த தொழிலதிபருக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, தான் சர்வதேச கிரெடிட் கார்டு கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், ஒரு ரூபாயில் தங்களது கம்பெனி பல்வேறு சலுகைகளை வழங்குவதாகவும் அந்த நபர் தெரிவித்தார். அதோடு தான் அனுப்பும் லிங்கை திறந்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி அனுப்பும் படி மர்ம நபர் தெரிவித்தார். தொழிலதிபரும் தனது கிரெடிட் கார்டு மற்றும் தனது மனைவியின் கிரெடிட் கார்டு விபரங்கள், ஆதார் கார்டு, பான் கார்டு விபரங்களை அனுப்பி வைத்தார். அதோடு தனது வாட்ஸ் ஆப் நம்பரையும் அனுப்பினார். பின்னர் உங்களது கிரெடிட் கார்டில் இருந்து ஒரு ரூபாயை அனுப்பும்படி கேட்டார். தொழிலதிபரும் அது போன்று செய்தார். ஆனால் அடுத்த சிறிது நேரத்தில் தொழிலதிபரின் மனைவியின் கிரெடிட் கார்டில் இருந்து 14 லட்சம் செலவு செய்திருப்பதாக மெசேஜ் வந்தது. உடனே இது குறித்து தொழிலரிடம் அவரது மனைவி கேள்வி எழுப்பியபோதுதான் தனது கார்டு விபரத்தையும் பார்த்தார். அதிலும் 7 லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் செலவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தொழிலதிபர் இது குறித்து சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/gk9U1Ip

Post a Comment

0 Comments