`தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கடந்து வந்த பாதை!' - ஒரு பார்வை

இந்தியாவைப் பொறுத்தவரை வடக்கே உள்ள மாநிலங்களில் தேசிய கட்சிகளின் ஆதிக்கம்தான் அதிகம் என்றால், தெற்கில் மாநிலக் கட்சிகளின் ராஜாங்கம்தான் பெரும்பாலும் நடக்கும். அதிலும் குறிப்பாக ஒரு மாநிலத்தில், ஒரே கட்சி தொடர்ந்து ஆட்சி அமைத்து, தேசிய கட்சிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, சட்டமன்றத் தேர்தலிலும் சரி, இவரைப் பகைத்துக் கொண்டு அங்கு ஜெயிப்பது மிகவும் கடினம். அவர்தான் இந்தியாவின் இளைய மாநிலமான தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவ். மத்தியில் பா.ஜ.க-வை எதிர்த்து காங்கிரஸ் அல்லாது அனைத்து மாநிலக் கட்சிகளையும் ஒன்று திரட்டி மூன்றாவதாக ஒரு கூட்டணி அமைய வேண்டும் என்று முதலில் முன்மொழிந்து, தற்போது அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி - கே.எஸ்.ஆர்.

தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சி ஆரம்பித்து இன்றோடு 21 ஆண்டுகள் ஆகின்றன. வருடா வருடம் ஏப்ரல், 27-ம் தேதி கட்சியின் தொடக்க நாளையொட்டி கட்சி உறுப்பினர்களின் முழு அமர்வோடு கோலாகலமாகக் கொண்டாடுவது டி.ஆர்.எஸ் வழக்கம். கடந்த மூன்று வருடங்களாகத் தேர்தல் மற்றும் கொரோனா பரவல் காரணமாகப் பெரிதாக கொண்டாடவில்லை. இந்த நிலையில், இன்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்று கூடியிருக்கிறது டி.ஆர்.எஸ். இதனையொட்டி கட்சியின் மூத்த உறுப்பினர்களிலிருந்து, அமைச்சர்கள், இரு அவை சட்டசபை உறுப்பினர்கள், காவல்துறையினர், பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று அனைவர்க்கும் அழைப்பு விடுத்திருந்தார் கே.சி.ஆர். இது தவிர மக்கள் கலந்துகொள்ளத் தனியே 2,500 சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மேலும் கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு இன்று 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கடந்து வந்த பாதை குறித்துப் பார்க்கலாம்.

ஒரு மாநிலத்தில் இவ்வளவு பலமான... பெரிய கட்சியாக ஒரு கட்சி இருக்கிறதென்றால், அந்தக் கட்சி கொள்கை அளவில் வலுவான கட்சியாக இருக்க வேண்டும் அல்லது அந்தக் கட்சியின் தலைவர் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்த இரண்டையுமே ஆரம்பக் காலத்தில் செய்தவர்தான் கே.சி.ஆர்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி

1956-ல் மதராஸ் பிரசிடென்சியிலிருந்து தெலுங்கு பேசும் மக்கள் வாழும் பகுதியானது தனியாக ஆந்திர மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. இதில் தெலங்கானா பகுதியில் வாழும் மக்களுக்கு முறையாகக் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை போன்ற எதுவும் வழங்கப்படவில்லை எனத் தொடர்ந்து ஆந்திர அரசின் மீது குற்றம்சாட்டி வந்தனர். இதனையடுத்து 1969-ல் இருந்து தெலங்கானா மாநிலம் வேண்டி மக்கள் போராட்டம் தொடர்ந்தது. அப்போது பிரதாப் கிஷோர் தலைமையில் தெலங்கானா பிரஜ சமிதி என்ற கட்சி தொடங்கப்பட்டது. ஆனால், சிறிது காலம் தெலங்கானா மாநிலம் அமைக்கக்கோரிப் போராடிய அந்தக் கட்சி பின்னர் நாளடைவில் கலைக்கப்பட்டு காங்கிரஸோடு இணைந்தது.

தெலங்கானா மக்கள் ஆந்திர மக்களால் வஞ்சிக்கப்பட்டது தொடர்ந்தது. நாளுக்கு நாள் அதிகரித்த தனி மாநில கோரிக்கைகளைக் கட்டுப்படுத்த 1973-ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசு, ஆந்திராவில் வாழும் தெலங்கானா மக்களின் நலனைக் காக்க ஆறு அம்ச கோரிக்கையை வெளியிட்டது. இருந்தபோதும், அதை அப்போது யாரும் பின்பற்றவில்லை. தெலங்கானா மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்று 1985-ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் அவர்களின் தனி மாநில கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல், அவர்களைத் தற்காலிகமாகச் சமாதானம் செய்யும் வகையில் தெலங்கானா மக்களுக்காக முறையான வேலை வழங்கும் அரசாணையை அறிவித்தது அரசு. பின்னர் அதுவுமே முறையாக பின்பற்றப்படவில்லை என்று 2001-ல் விசாரணை ஆணையம் அமைக்கும் அளவிற்கெல்லாம் சென்றது.

சந்திரசேகர் ராவ்

இதற்கிடையில் தொடர்ந்து தெலங்கானா மக்களைக் கவனித்து வந்துகொண்டிருந்த பா.ஜ.க அரசு, 1997-ல் தெலங்கானா மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் மேற்கொண்டது. ஆனால் அதுவுமே அங்குள்ள மக்களின் வாக்குக்காகச் செய்ததால், பா.ஜ.க-வுக்கு அது பெரிதும் பயனளிக்கவில்லை. இதற்கிடையில்தான் அன்றைய தெலுங்கு தேசம் கட்சியில் துணைச் சபாநாயகராக இருந்த சந்திரசேகர் ராவ் கட்சியை விட்டு ராஜினாமா செய்கிறார். தன் நெருக்கமானவர்களுடன் சேர்ந்து ஏப்ரல் 27, 2001-ம் ஆண்டு தெலங்கானா ராஷ்டிர சமிதி என்று ஒரு புதிய கட்சியைத் தொடங்குகிறார். தெலங்கானா மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஒரே கோரிக்கைதான் கட்சியின் கொள்கை. தெலங்கானா மாநில கோரிக்கையை ஆதரித்த அனைவரையும் தம் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்துக்காகப் போராடி வரும் பேராசிரியர் ஜெயசங்கரிடம் இருந்தும் அவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. கட்சி ஆரம்பித்த மூன்று ஆண்டுகளில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து, தன் முதல் தேர்தலிலேயே 26 எம்.எல்.ஏ-க்கள், 5 எம்.பி-க்களுடன் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நுழைந்தது டி.ஆர்.எஸ். ஆனால் தனி மாநில கோரிக்கை குறித்து காங்கிரஸ் எந்தவொரு பெரிய நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், 2006-ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் நடைபெற்ற தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெறுகிறார் சந்திரசேகர். அதன்பின்பு நடைபெற்ற 2009 தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் டி.ஆர்.எஸ் இணைகிறது. ஆனால், அந்த தேர்தலில் 10 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் மட்டுமே வெற்றி பெற்றார்கள்.

கே.சி.ஆர். உண்ணாவிரதப் போராட்டம்

இதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு, நவம்பர் 29-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் கே.சி.ஆர். இதனையடுத்து கே.சி.ஆர் உடனே கைது செய்யப்பட்டாலும், ஆந்திரா முழுவதும் உள்ள டி.ஆர்.எஸ் கட்சியின் தொண்டர்கள் பெருவாரியாகப் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத ஆந்திர அரசு, அனைத்து கட்சிக் கூட்டங்களை ஒருங்கிணைத்து டிசம்பர் 9, 2009 அன்று தெலங்கானா மாநிலத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், அதையும் காலப்போக்கில் காங்கிரஸ் கண்டுகொள்ளாததால், பேராசிரியர் கொன்டாந்திரம் ரெட்டி தலைமையில் ஒரு போராட்டக் குழுவினை அமைத்தார் கே.சி.ஆர். தொடர்ந்து 4 ஆண்டுகளாகத் தனி மாநிலத்திற்காகப் போராடி, இறுதியில் பிப்ரவரி 2014-ம் ஆண்டில் தனி மாநில மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2 ஜூன், 2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உதயமானது.

அப்போது 2014-ல் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் 63 இடங்களை டி.ஆர்.எஸ் கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதற்கு அடுத்து நடைபெற்ற தேர்தலிலும் 88 இடங்களைக் கைப்பற்றி பெருவாரியாக வெற்றி பெற்றது தெலங்கானா ராஷ்டிர சமிதி. வரும் 2023-ம் ஆண்டு அடுத்த தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோருடன் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறது டி.ஆர்.எஸ். ஏற்கெனவே காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், தற்போது அதற்கு எதிரும் புதிருமாய் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரிதும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. இது தவிரக் காங்கிரஸ் அல்லாது ஒரு மூன்றாவது அணியைத் தேசிய அளவில் உருவாக்க வேண்டும் என்று 2009-ல் இருந்தே கே.சி.ஆர் கூறிவருகிறார்.

சந்திரசேகர் ராவ்

அதனடிப்படையில் தற்போது சரத் பவாரையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் கூட சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ``டி.ஆர்.எஸ் ஜெயிப்பதற்கு பிரசாந்த் கிஷோர் வேண்டியதில்லை. தனியாகவே நின்று டி.ஆர்.எஸ் வெற்றி பெறும்" என்று அந்தக் கட்சியின் மூத்த அமைச்சர் கே.டி.ராமராவ் அறிவித்துள்ளதும் அரசியல் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் தீர்வாக இன்று நடைபெறும் விழாவில் கே.சி.ஆர் முற்றுப்புள்ளி வைப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற கட்சி விழாவில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அவற்றை சுருக்கமாகப் பார்க்கலாம்:-

  • வரும் காலங்களில் டி.ஆர்.எஸ் கட்சி தேசிய அளவில் பங்கு வகித்து, அங்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும்.

  • பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மாநில அளவில் நடைமுறைப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்படும்.

  • நிகழும் ஆண்டில் நெல் கொள்முதலை மாநில அரசே மேற்கொள்ளும்.

  • பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும், இஸ்லாம் மற்றும் மலைவாழ் மக்களின் இடஒதுக்கீட்டை அதிகபடுத்த தீர்மானம் நிறைவேற்றப்படும்.

சந்திரசேகர் ராவ்
  • தென் மாநிலங்களில் நவோதயா வித்யாலயா மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்க வேண்டும்.

  • `தலித்பந்து' திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

  • கைத்தறி தொழில்களில் மத்திய அரசு விதித்துள்ள 5% ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும்... உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்களை முன்மொழிந்தார் சந்திரசேகர் ராவ்.

இது தவிர பா.ஜ.க அரசின் ஒரு நாடு ஒரு பதிவு திட்டத்தை கைவிட வேண்டுமென்றும், பெட்ரோலுக்கான வரியில் மாநிலங்களுடன் பகிர்ந்தளிக்கக்கூடிய வரியை அதிகம் வசூலிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். இது போன்ற 13 தீர்மானங்களை இன்று நடைபெற்றக் கூட்டத்தில் கே.சி.ஆர் முன்மொழிந்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/WM13yJY

Post a Comment

0 Comments