``மும்பையை பிரித்து யூனியன் பிரதேசமாக்க பாஜக சதி; ஆதாரம் இருக்கிறது!” - குற்றம்சாட்டும் சிவசேனா

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. அமலாக்கத்துறை மும்பையில் சிவசேனா தலைவர்களுக்கு எதிராக முழுநேரமும் பணியாற்றி வருகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் சிவசேனா கட்சியினர். இரண்டு நாட்களுக்கு முன்பு சஞ்சய் ராவத் மனைவி பெயரில் இருந்த வீட்டை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் இன்று அளித்துள்ள பேட்டியில், ``மும்பையை பாஜக தனியாக பிரிந்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க சதி செய்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான திட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. கிரீத் சோமையாவும், பாஜக தலைவர்கள் சிலரும், சில தொழிலதிபர்கள், பில்டர்களும் இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக நிதியும் திரட்டி வருகின்றனர். இரண்டு மாதங்களாக இப்பணிகள் நடக்கிறது. நான் சொல்லும் இந்த தகவலுக்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். எனது இந்த குற்றச்சாட்டுக்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது.

சஞ்சய் ராவத்

பாஜகவின் சதி குறித்து முதல்வரும் அறிவார். இன்னும் சில மாதத்தில் கிரீத் சோமையாவும், சில தலைவர்களும் சேர்ந்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். மும்பையில் மராத்தியர்களின் எண்ணிக்கை இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. எனவே மும்பையை தனியாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கக்கூடும். பள்ளியில் மராத்தியை கட்டாய பாடமாக அறிவிக்கும் திட்டத்திற்கு கூட கிரீத் சோமையா எதிர்ப்பு தெரிவித்தார்” என்று தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே சிவசேனா கிரீத் சோமையாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது. நவிமும்பை கார்கரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டுக்கு கிரீத் சோமையா பதிலளிக்கவேண்டும் என்று சிவசேனா தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் சிவசேனா இப்படி ஒரி குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/3ugJehd

Post a Comment

0 Comments