கேரள மாநிலத்தில் பிரபல நடிகை ஒருவர், நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது பாலியல் புகார் அளித்திருக்கிறார். கடந்த மார்ச் 13, 14 ஆகிய தினங்களில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நடிகை போலீஸில் புகார் அளித்திருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி மது, போதைப்பொருள்கள் கொடுத்து தன்னை விஜய்பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நடிகை தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து எர்ணாகுளம் சவுத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், விஜய்பாபு ஃபேஸ்புக் லைவில் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. வழக்கமாக பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரைப் பொதுவெளியில் சொல்லக்கூடாது என்பது விதி. ஆனால், விஜய்பாபு சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை ஃபேஸ்புக் லைவில் கூறியதால், அதற்கென தனி வழக்கு பதிவு செய்ய போலீஸார் தயாராகி வருகின்றனர்.
அந்த சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் லைவில் பேசிய விஜய்பாபு, ``அந்த நடிகை மன அழுத்தத்தில் இருந்தார். என்னைச் சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அவர் புகார் அளித்ததால் என் மனைவி, அம்மா, நண்பர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டது நான்தான். எனவே அந்த நடிகையின் பெயரை வெளியே சொல்கிறேன். இதனால் வரும் வழக்கை நான் சந்திக்கிறேன். அந்த நடிகை என்னிடம் சாட் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அவர் மீது மானநஷ்ட இழப்பீடு கேட்டு வழக்கு தொடருவேன்" எனக் கூறியிருந்தார்.
புகார் அளித்த நடிகையை மிரட்டும் விதமாகப் பேசியதாக விஜய்பாபுவுக்கு கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. கடந்த சனிக்கிழமை துபாய்க்கு சென்ற விஜய்பாபு, இப்போது துபாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புகார் அளித்த நடிகையிடம் போலீஸார் ரகசிய விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவிருக்கின்றனர். கேரள சினிமா நடிகையின் பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/P7UeL34
0 Comments