கர்நாடகாவில், கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய ஹிஜாப் விவகாரம், இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர, கர்நாடக அரசு தடை விதித்தது. அந்தத் தடையை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில், ``இஸ்லாமியச் சட்டப்படி ஹிஜாப் அணிவது அவசியமில்லை என்பதால், கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்’’ என்று தீர்ப்பளித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பு வெளியான பிறகு மார்ச் 28-ம் தேதி அன்று கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், சுமார் 21,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதனால் மீண்டும் மாநிலம் முழுவதும் பரபரக்கத் தொடங்கியது ஹிஜாப் விவகாரம். இந்த ஹிஜாப் விவகாரம் அடங்குவதற்குள்ளாக அடுத்தடுத்த மதப் பிரச்னைகள் கர்நாடகாவில் தலைதூக்கியிருக்கின்றன. `இந்துக் கோயில்களுக்கு வெளியே இஸ்லாமியர்கள் கடை போடக்கூடாது' என்று இந்து அமைப்புகள் கோயில்களுக்கு வெளியே பேனர்களை வைத்திருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்ப, ``இந்துக் கோயில் நிலங்களுக்கு அருகிலுள்ள கட்டடம், நிலம் உள்ளிட்ட எந்தச் சொத்துகளையும் இந்து அல்லாதவர்களுக்குக் குத்தகைக்கு விடக் கூடாது என்று கர்நாடகாவின் இந்து சமயச் சட்டம் சொல்கிறது. அதை பின்பற்றித்தான் கோயில்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன'' என்று பதிலளித்தார் சட்டத்துறை அமைச்சர் மதுசுவாமி.
தொடர்ந்து, `ஹலால் இறைச்சிகளை விற்கத் தடை விதிக்க வேண்டும்' என்று இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடித் தூக்கின. ``ஹலால் இறைச்சிக்கு எதிராக எழுந்திருக்கும் தீவிர எதிர்ப்புகளைக் கூர்ந்து கவனித்துவருகிறது அரசு. இதில் உரிய நடவடிக்கைகளை எடுப்போம்'' என்று கூறியிருந்தார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை. இதையடுத்து பஜ்ரங் தள் ஆதரவாளர்கள் சிலர், ஹலால் இறைச்சி விற்கும் இஸ்லாமியர்களை மிரட்டியதோடு, அவர்களது கடைகளையும் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்த நிலையில் அடுத்தப் பிரச்னையாக, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக இந்து அமைப்புகள் எதிர்ப்பை கிளப்பியிருக்கின்றன. இது தொடர்பாக, ஶ்ரீராமசேனை, பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகள் கர்நாடகாவின் சில மாவட்டங்களில், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்திருக்கின்றனர். அந்த மனுவில், ஒலிபெருக்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்த டெசிபல் அளவு பற்றிய உத்தரவைச் சுட்டிக் காட்டியதோடு, ``காலை 5 மணிக்கு மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், மசூதிகளுக்குப் போட்டியாக அனுமன் பாடல்களையும், ஓம் நமச்சிவாய, ஜெய் ஶ்ரீராம் உள்ளிட்ட மந்திரங்களைக் கோயில்களில் ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்பப் போவதாக அறிவித்திருக்கிறது பஜ்ரங் தள் அமைப்பு. முதற்கட்டமாக, பெங்களூரிலுள்ள அனுமன் கோயிலில் இந்த விஷயத்தைத் தொடங்கப்போவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, `மாநிலம் முழுவதும் இந்த ஒலிபெருக்கி விவகாரத்தைக் கண்காணித்து, அசம்பாவிதங்கள் நடக்கும் முன் தடுத்து நிறுத்த வேண்டும்' என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது மாநில அரசு.
இது குறித்துப் பேசிய கர்நாடக அமைச்சர் அஸ்வத் நாராயண் ``கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது. எனவே, இந்த விஷயத்தில் ஒருதலைபட்சமாக அரசு செயல்படாது. சட்ட விதிமுறைகள் படியே அரசு செயல்படும்'' என்றார். மற்றொரு அமைச்சர் ஈஸ்வரப்பா, ``இஸ்லாமியர்களின் தொழுகைக்கு நாங்கள் இடையூறு செய்யவில்லை. ஆனால், இதுபோன்ற விஷயங்கள் இரு சமூகங்களுக்கிடையே பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, இதில் உரிய நடவடிக்கை எடுப்போம்'' என்றிருக்கிறார்.
முதல்வர் பசவராஜ் பொம்மையோ, ``ஒலிபெருக்கி பயன்பாடு குறித்து உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகள் இருக்கின்றன. இது பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறி புரிய வைப்போம்'' என்றிருக்கிறார். இந்த நிலையில், ஏப்ரல் 6 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான தடை செய்யப்பட்ட நேரங்களில், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதற்காக வழிபாட்டுத் தலங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட 310 நிறுவனங்களுக்குப் பெங்களூரு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த 310 நிறுவனங்களில், 125 மசூதிகளும், 83 கோயில்களும், 22 தேவாலயங்களும் அடக்கம் என்கின்றன செய்திக் குறிப்புகள்.
ஒலிபெருக்கி விவகாரம் தொடர்பாகப் பேசும் இஸ்லாமியர்கள் சிலர், ``இவ்வளவு காலம் ஹிஜாப், ஹலால், ஒலிபெருக்கிகள் என எந்தவொரு விஷயத்துக்கும் எதிர்ப்புகள் கிளம்பியதில்லை. ஆனால், இப்போது திட்டமிட்டே இதுபோன்ற எதிர்ப்புகளைக் கிளப்புகின்றனர். குறிப்பிட்ட அமைப்புகள் எதிர்ப்புகளைக் கிளப்பிய சில மணி நேரத்திலேயே, ஆட்சியாளர்கள் அது பற்றி கருத்துத் தெரிவிப்பதே சந்தேகத்தைக் கிளப்புகிறது. எங்களுடன் நீண்ட காலமாக நட்புடன் இருக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த சகோதரர்கள், இப்போதும் எங்களுடன் நட்பாகவே இருக்கிறார்கள். இரு சமூகங்களுக்கிடையே சண்டை மூட்ட நினைப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்'' என்கிறார்கள்.
கர்நாடக அரசியலை உற்று நோக்கும் சிலர், ``வட இந்தியாவைப் போலத் தென் இந்தியாவிலும் மத அரசியலை முன்னெடுக்கும் திட்டம் பா.ஜ.க-விடம் இருப்பதாகத் தெரிகிறது. முதற்கட்டமாக, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் கர்நாடகாவில் மத அரசியலைக் கையிலெடுத்திருக்கிறது பா.ஜ.க என்றுதான் தோன்றுகிறது. எடியூரப்பா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பசவராஜ் பொம்மையைக் கர்நாடக முதல்வராக்கியதுகூட இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்'' என்கிறார்கள்.
பா.ஜ.க ஆதரவாளர்களோ, ``நாங்கள் சட்டத்தை மீறி எதையுமே செய்யவில்லை. ஒலிபெருக்கி விவகாரத்திலும் உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டியே புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தையும் நீதிமன்ற உத்தரவுகளையும் மதித்து நடப்பது எந்த வகையில் தவறாகும்'' என்று கேள்வியெழுப்பிவருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/PLyDOfZ
0 Comments