உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் கவாஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றியதாக இன்று காலை காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அந்த வீட்டில் குழந்தை உள்பட 5 பேரின் சடலங்களை கண்டெடுத்துள்ளது.
அது தொடர்பான விசாரணைக்குப் பின் மூத்த காவல்துறை அதிகாரி அஜய் குமார் தெரிவித்ததாவது, "வீடு தீப்பற்றியுள்ளது என அக்கம்பக்கத்து வீட்டார் அளித்த தகவலின் பேரில் வந்த போது அந்த வீட்டில் ராம் குமார் யாதவ் (55), அவரின் மனைவி குசும் தேவி (52), மகள் மனிஷா (25), மருமகள் சவிதா (27), பேத்தி மீனாட்சி (2) ஆகியோர் இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதில் மற்றொரு பேத்தி சாக்ஷி (5) மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்த போது ராம் குமார் யாதவின் மகன் சுனில் (30) வீட்டில் இல்லை. இறந்த 5 பேரின் தலையிலும் உடலிலும் உள்ள காயங்கள் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அறியமுடிகிறது. எனவே, அவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மரணங்கள் தொடர்பாக விசாரிக்க ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தடயவியல் நிபுணர்கள், மற்றும் மோப்பநாய் படை உதவிவருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கொலை நடந்த இடத்துக்கு விரைந்த மாவட்ட நீதிபதி சஞ்சய் குமார் காத்ரி இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்பகை காரணமாகக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர், மற்றும் காவல்துறையை மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இதே உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி ககல்பூர் கிராமத்தில், 38 வயதான பெண் ப்ரீத்தி திவாரி, அவரின் மூன்று மகள்கள், மஹி (12), பிஹு (8),குஹு (3) ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.
அந்த பெண்ணின் கணவர் ராகுல் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில், ``மாமியார் மனரீதியாகக் கடுமையாகத் துன்புறுத்தியதால் நான் எடுத்த முடிவு இது" என எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் மற்றொரு குடும்பம் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/tfQrD61
0 Comments