மகாராஷ்டிரா: முதல்வர் வீடு முன் ஹனுமான் பாடல் பாடமுயன்ற பெண் எம்பி கைது -பாஜக தலைவர் மீது தாக்குதல்

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் எம்.பி-யாக இருப்பவர் நவ்நீத் ராணா. இவர் கணவர் ரவி ராணா இதே மாவட்டத்தில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். மகாராஷ்டிராவில், மகாராஷ்டிரா நவநிர்மாண் தலைவர் ராஜ்தாக்கரே மசூதிகளில் இருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்றவில்லையெனில் மசூதிக்கு வெளியில் ஹனுமான் பாடல்கள் பாடுவோம் என்று எச்சரித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ரவி ராணா தன் மனைவியுடன் சேர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே இல்லம் முன் சனிக்கிழமை ஹனுமான் பாடல்களை பாடப்போவதாக அறிவித்திருந்தார். இதற்காக இருவரும் மும்பை வந்தபோது அவர்கள் கார்ரோடு பகுதியில் இருக்கும் வீட்டில் தங்கி இருந்தனர். சனிக்கிழமை காலையிலிருந்து சிவசேனாவினர் ராணா தம்பதியினர் தங்கி இருந்த வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீஸார் தடுப்பு அமைத்து அவர்களை கட்டுப்படுத்தினர். ஆனாலும் போலீஸ் தடுப்புகளை மீறி சிவசேனாவினர் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அதையடுத்து, ராணா வீட்டின் மீது சிவசேனாவினர் கல்வீசித்தாக்கினர். போலீஸார் ராணா தம்பதியை வீட்டுக்காவலில் வைத்தனர். மாலை வரை சிவசேனாவினர் போராட்டம் நடத்தினர்.

ராணா தம்பதி கைது

அதையடுத்து, மாலையில் ராணா தம்பதியினர் முதல்வர் இல்லம் முன்பு ஹனுமான் பாடல்களை பாடும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி மும்பை வர இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க இந்த முடிவை எடுத்திருப்பதாக ரவி ராணா தெரிவித்தார்.

ஆனாலும் ராணா தம்பதியினர், இரு பிரிவினர் இடையே விரோதத்தை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதோடு ராணா தம்பதியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி சிவசேனாவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கார்ரோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும் பின்னர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். இது குறித்து ராணாவின் வழக்கறிஞர் ரிஷ்வான் மெர்ச்சண்ட் கூறுகையில், ``எம்,எல்.ஏ மற்றும் எம்.பி-யை கைது செய்யும் முன்பு சபாநாயகரிடம் அனுமதி பெறவேண்டும். எனவே கைது நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும்" என்று கோரினார்.

கைது

போலீஸ் நிலையத்தில் இருக்கும் ராணா தம்பதியை காண பா.ஜ.க முன்னாள் எம்.பி.கிரீத் சோமையா வந்தார். அவரது வாகனத்தின் மீது சிவசேனாவினர் தாக்குதல் நடத்தினர். இது குறித்து கிரீத் சோமையா போலீஸில் புகார் செய்துள்ளார். தன்னை சிவசேனாவினர் கொலை செய்ய முயன்றதாகவும், தனது வாகனத்தின் மீது கல், செருப்பு வீசித்தாக்கினர் என்றும், இதில் தான் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தனது புகாரை போலீஸார் பதிவு செய்ய மறுப்பதாகவும், மகாராஷ்டிராவில் ராவணன் ஆட்சி நடப்பதாகவும், ராணா தம்பதியினர் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார். ராணா தம்பதி கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், ``கைது நடவடிக்கை மிகவும் வேதனையாக இருக்கிறது. சிவசேனாவினர் மிரட்டல் அறிக்கை விடுத்தாலோ அல்லது பா.ஜ.க தலைவரின் கார் தாக்கப்பட்டாலோ போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவுத் அளித்துள்ள பேட்டியில், ``மும்பையின் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. கடந்த சில நாள்களாக போலி இந்துத்துவாதி (ராணா தம்பதி) மும்பையின் அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர்" என்று கூறினார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/cTeEwg5

Post a Comment

0 Comments