மும்பையில் குடிசைகள் இருந்த தெருவை இடித்துவிட்டு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவது தொடர்பான மோசடியில் ரூ.1,034 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத்தின் உறவினர் பிரவின் ராவுத் கைது செய்யப்பட்டார். இந்த நில மோசடியில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத்தின் மனைவி வர்ஷா ராவுத்திடமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏற்கெனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், எச்.டி.ஐ.எல் நிறுவனர் ராகேஷ் வாதாவன், சரங் வதாவன் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பிரவின் ராவுத் தன் மனைவி வங்கிக் கணக்கு மூலம் சஞ்சய் ராவுத் மனைவி வர்ஷாவிற்கு ரூ.55 லட்சம் கொடுத்ததாக கண்டுபிடித்துள்ளது. அதேபோல, சஞ்சய் ராவுத், அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானம், ஹோட்டல்களில் ரூம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பிரவின் ராவுத்திற்கு சொந்தமான 8 நிலங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதில், 8 நிலங்கள் அலிபாக்கில் இருக்கின்றன. இந்த நிலங்களின் மதிப்பு ரூ.9 கோடியாகும். இது தவிர சஞ்சய் ராவுத் மனைவிக்கு சொந்தமான வீடு ஒன்றையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த வீட்டின் மதிப்பு ரூ.2 கோடியாகும். அலிபாக் நிலம் 2010-12-ம் ஆண்டில் மோசடி பணத்தில் வாங்கப்பட்டதாகும் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சஞ்சய் ராவுத் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். சிவசேனாவின் செய்தித்தொடர்பாளராகவும் இருக்கிறார். ஏற்கெனவே அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் உத்தவ்தாக்கரேயின் மைத்துனருக்கு சொந்தமான வீடுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் ராவுத், ``எனது சொத்துகளை பறிமுதல் செய்யுங்கள், என்னை துப்பாக்கியால் சுடுங்கள், என்னை சிறையில் போடுங்கள் நான் பயப்படமாட்டேன். நான் பாலாசாஹேப் தொண்டன். எதையும் எதிர்த்துப் போராடுவேன். நான் அமைதியாக இருக்க மாட்டேன். உண்மையை வெளிக்கொண்டு வருவேன். அவர்கள் ஆடட்டும். உண்மை வெளியில் வரும்" என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/W4DHKXa
0 Comments