கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மதம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்துவருகின்றன. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய ஹிஜாப் விவகாரம், தேசிய அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இஸ்லாமிய மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்குத் தடைவிதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் சிலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் மார்ச் 15-ம் தேதி அன்று கர்நாடக உயர் நீதிமன்றம், ``இஸ்லாமிய சட்டப்படி ஹிஜாப் அணிவது அவசியமானதல்ல. எனவே, கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்'' என்று தீர்ப்பளித்தது. இந்த ஹிஜாப் விவகாரம் அடங்குவதற்குள்ளாக தற்போது கர்நாடகாவில், வேறொரு மத சம்பந்தப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்திலுள்ள சில மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு நடைபெறப்போகும் திருவிழாக்களுக்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகங்கள் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக, திருவிழா சமயத்தில் கோயிலைச் சுற்றிக் கடை போடுவதற்கு ஏலம் நடத்தப்படும். அந்த ஏலத்தில் இஸ்லாமியர்கள் கலந்துகொள்ளக்கூடாது என புதிய விதியை சில கோயில் நிர்வாகங்கள் அறிவித்திருக்கின்றன. எந்த ஆண்டும் இல்லாத வகையில், ஓர் விதியை கோயில் நிர்வாகங்கள் அறிவித்திருப்பது இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே முல்கி பகுதியிலுள்ள துர்காபரமேஸ்வரி கோயில் வாசலில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பேனரில், ``இந்த நிலத்தின் சட்டங்களையும், அரசியலமைப்பையும் மதிக்காதவர்களுடன் வியாபாரத்தில் ஈடுபடமாட்டோம். நாங்கள் வணங்கும் பசுக்களைப் பலியிடுபவர்களுக்கு இனி இங்கு வியாபாரம் செய்ய இடமில்லை'' என்று அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியில் வியாபாரம் செய்துவந்த இஸ்லாமியர்கள் கவலையடைந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த துர்காபரமேஸ்வரி கோயிலைக் கட்டியதில் இஸ்லாமியர்களுக்கும் முக்கியப் பங்குண்டு என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இது குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் மதுசுவாமி, ``இந்து சமய நிறுவனச் சட்டம் 2002-ன் படி, இந்துக் கோயில்களின் வளாகத்துக்குள்ளும், அதனைச் சுற்றிய பகுதிகளிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் வியாபாரம் செய்ய அனுமதியில்லை'' என்று கூறினார். இதையடுத்து கர்நாடகத்தைச் சேர்ந்த முற்போக்காளர்கள் சிலர், ``அப்படி சட்டம் இருக்கிறதென்றால், இத்தனை ஆண்டுகளாக எப்படி இஸ்லாமியர்கள் கோயில்களை ஓட்டிய பகுதிகளில் கடை போட்டிருந்தார்கள். இந்த ஆண்டுதான் சில கோயில் நிர்வாகங்கள் இப்படியான விதிமுறைகளை முதன்முறையாகக் கொண்டுவந்திருக்கின்றன. தற்போதைய ஆட்சியாளர்கள் இதுவரை இல்லாத பிரச்னைகளையெல்லாம் உருவாக்க நினைக்கிறார்கள். மத நல்லிணக்கத்தைக் கெடுத்து, அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, `200 அல்லது 500 ஆண்டுகளில் காவிக்கொடியே தேசியக் கொடியாக மாறலாம்' என்று பேசினார். முதல்வர் பசவராஜ் பொம்மை இதற்குக் கண்டனம் தெரிவிக்காமல், `ஈஸ்வரப்பா பேசியது சட்டப்படி தவறில்லை' என்கிறார். கர்நாடகத்தில் இனி என்னவெல்லாம் செய்யப்போகிறார்களோ'' என்று கொந்தளிக்கிறார்கள்.
கர்நாடக பா.ஜ.க அரசுமீது, `பள்ளி தொடங்கி சட்டப்பேரவை வரை இந்துத்துவா கொள்கைகளைக் கொண்டு சேர்க்க நினைக்கிறது' என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது குறித்துப் பேசும் பா.ஜ.க ஆதரவாளர்கள், ``பா.ஜ.க அரசு சட்டப்படிதான் அனைத்து விவகாரங்களையும் அணுகிவருகிறது. நாங்கள் இஸ்லாமியர்களோடு நல்லிணக்கத்தோடு இருக்கவே விரும்புகிறோம். ஆனால், ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமியர்கள் பலரும் சட்டத்தையும், நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்க மறுப்பது தவறுதான்'' என்கிறார்கள்.
இந்த விவகாரத்தைக் கூர்ந்து நோக்கும் அரசியல் நோக்கர்கள் சிலர், ``சமீபகாலமாகக் கர்நாடகாவில் மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்வது அதிகரித்திருக்கிறது. வட இந்தியாவைப் போலத் தென்மாநிலமான கர்நாடகாவிலும் மத அரசியல் அதிகரித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில்கூட இதுபோன்ற பிரச்னைகள் வந்ததில்லை. பசவராஜ் பொம்மை ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்துதான் மதப் பிரச்னைகள் அதிகரித்திருக்கின்றன. நினைத்ததை முடிப்பவர் என்று பெயரெடுத்தவர் பொம்மை. எனவேதான் பா.ஜ.க மேலிடம் எடியூரப்பாவை நீக்கிவிட்டு, பொம்மையை முதல்வராக்கியிருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கர்நாடகாவில், காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது. எனவே, 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்பதற்காகத்தான் இதுபோன்ற பிரச்னைகளைப் பா.ஜ.க கையிலெடுக்கிறது எனவும் தோன்றுகிறது'' என்கிறார்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/o2smj0G
0 Comments