பெண்களுக்கு வீட்டில் உடற்பயிற்சி செய்ய கிடைக்கும் நேரம் மிகக் குறைவுதான். அதுவும் வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், மும்பையில் வேலைக்குச் செல்லும் பெண்கள் சிலர் தங்களது பயண நேரத்தை உடற்பயிற்சி செய்யவும், யோகா செய்யவும் பயன்படுத்தி வருவது பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
பொதுவாக மும்பையில் வேலைக்குச் செல்லும் பெண்களில் 90 சதவிகிதத்தினருக்கு மேல் புறநகர் ரயில்களைத்தான் பயணத்திற்குப் பயன்படுத்துகின்றனர். புறநகர்ப் பகுதியில் இருந்து மும்பைக்கு வர ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக ஆகும். இந்த நேரத்தை பெண் பயணிகள் பயனுள்ள வகையில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டால் உடனே போனை எடுத்துப் பார்க்க ஆரம்பிப்பவர்களை, யோகா பயிற்சியாளர் ருச்சிதா ஷா யோகா பக்கம் திருப்பி இருக்கிறார்.
`ஹீல் ஸ்டேஷன்' என்ற பெயரில் யோகா பயிற்சி மையம் நடத்தி வரும் ருச்சிதா ஷா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை புறநகர் ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். அதற்குப் பெண் பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் அதனை அப்படியே தொடர ஆரம்பித்தார்.
தற்போது கடந்த 5 ஆண்டுகளாக புறநகர் ரயிலில் பெண் பயணிகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கிறார். இது குறித்து ருச்சிதா ஷா கூறுகையில், ``பெண் பயணிகள் சராசரியாக தினமும் 2 மணி நேரத்தை ரயிலில் செலவிடுகின்றனர். அந்த நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தத் திட்டமிட்டோம்.
உடனே இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, ரயிலில் பெண்களுக்கு யோகா பயிற்சி நடத்த அனுமதிக்கவேண்டும் என்று கேட்டேன். ஆரம்பத்தில் இது மற்ற பயணிகளுக்கு அசவுகரியமாக இருக்கும் என்று கூறி இதற்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். அதன் பிறகு ரயில்வே அதிகாரிகளிடம் பேசி அவர்களை இதற்கு சம்மதிக்கவைத்தேன். தற்போது தினமும் போரிவலியிலிருந்து காலை 10.22 மணிக்கு சர்ச்கேட் செல்லும் புறநகர் ரயிலில் செல்லும் பெண்களுக்கு யோகா கற்றுக்கொடுக்கிறோம்'' என்றார்.
மேற்கு ரயில்வே பெண் ஊழியர்களுக்கும் ஸ்டேஷனில் தனியாக யோகா பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/Ggyrh1F
0 Comments