நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வி அடைந்தது. உ.பி-யில் மொத்தமிருக்கும் 403 தொகுதிகளில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. கடந்த தேர்தலில் 20 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த பகுஜன் சமாஜ், இந்தத் தேர்தலில் 12.88 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், ``மாயாவதி, பா.ஜ.க-வின் பி டீமாக செயல்பட்டு, அவர்களை உ.பி-யில் வெற்றிபெற வைத்திருக்கிறார்'' என்ற குற்றச்சாட்டு அவர்மீது வைக்கப்பட்டது. கூடவே சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத், ``உ.பி-யில் பா.ஜ.க வெற்றிக்குப் பாடுபட்ட மாயாவதி, ஓவைசிக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா விருதுகள் கொடுக்கலாம்'' என்று கொளுத்திப்போட, `பா.ஜ.க-வின் பி டீம்தான் பகுஜன் சமாஜ்' என்ற கருத்து நாடு முழுவதும் பற்றிக்கொண்டது.
உ.பி தேர்தலுக்கு முன்பாக நடந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக டி.வி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``உத்தரப்பிரதேச அரசியலில் மாயாவதியின் முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி மக்களிடையே தனது செல்வாக்கை இழந்துவிட்டதாகக் கூறுவது தவறு. பட்டியலின சமூகத்தின் வாக்குகளும் கணிசமான முஸ்லிம் மக்களின் வாக்குகளும் பகுஜன் சமாஜ் வசம் இருக்கிறது'' என்று பேசியிருந்தார். இதற்காக அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார் மாயாவதி. அப்போதே, `மாயாவதிக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே அண்டர்கிரவுண்ட் டீலிங் இருக்கிறது' என சமாஜ்வாடி கட்சித் தொண்டர்கள் பிரசாரம் செய்தனர்.
இந்த நிலையில், `மாயாவதிக்குக் குடியரசுத் தலைவர் பதவி கொடுப்பதாகச் சொன்னதால்தான், அவர் பா.ஜ.க வெற்றிபெற உதவி செய்திருக்கிறார்' என்ற புதிய குற்றச்சாட்டு ஒன்று கிளம்பியிருக்கிறது. வரும் ஜூலை மாதத்தோடு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில்தான், `பா.ஜ.க சார்பில் மாயாவதியைக் குடியரசுத் தலைவராக அறிவிக்கப்போகிறார்கள்' என்கிற தகவல் வலம்வந்து கொண்டிருக்கின்றன.
மார்ச் 27-ம் தேதி அன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்துப் பேசிய மாயாவதி, ``ஆர்.எஸ்.எஸ் மூலமாக பா.ஜ.க, நமது பகுஜன் சமாஜ் வாக்காளர்களிடம் போலியான செய்திகளைப் பரப்பி, உ.பி-யில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதாவது உ.பி-யில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், மாயாவதியைக் குடியரசுத் தலைவராக்குவோம் என்று சொல்லி நமது வாக்குகளை பா.ஜ.க பெற்றிருக்கிறது. பா.ஜ.க-விடம் நான் பதவி பெற விரும்புவதாகச் சொல்லும் தகவல்கள் தவறு. அப்படிச் செய்தால் பகுஜன் சமாஜ் கட்சி முடிவுக்கு வந்துவிடும். பா.ஜ.க அல்லது எந்தவொரு கட்சி வழங்கும் பதவிகளையும் நான் ஏற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் அவர்கள் என்னைத் தவறாக வழிநடத்தக்கூடும்'' என்று கூறியிருக்கிறார்.
மேலும், பகுஜன் சமாஜ் தொண்டர்கள் மத்தியில் பேசிய மாயாவதி, ``சில ஊடகங்களும், சமாஜ்வாடியும் இணைந்து பகுஜன் சமாஜ், பா.ஜ.க-வின் பி டீம் என்று தவறாகப் பிரசாரம் செய்துவிட்டனர். அதனால்தான் இஸ்லாமியர்களின் வாக்குகளும், பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளும் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டன. இதுபோக, சமாஜ்வாடி கட்சிபோல பகுஜன் சமாஜ் தேர்தலில் வலுவாகப் போட்டியிடவில்லை என்ற கருத்தும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. எனவே, மீண்டும் சமாஜ்வாடி ஆட்சிக்குவந்தால் உ.பி-யில் வன்முறைகள் அதிகரிக்கும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான், பொருளாதாரத்தில் முன்னேறிய சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், இதர சமூகத்தினர்களில் இருந்த நமது கட்சியின் ஆதரவாளர்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்துவிட்டனர்'' என்று பேசியிருக்கிறார்.
இது குறித்துப் பேசும் சமாஜ்வாடி தொண்டர்கள், ``தேர்தலில் படுதோல்வியடைந்ததை சமாளிக்கவே இப்படிப் பேசியிருக்கிறார் மாயாவதி. தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க-வை எதிர்த்து வீரியமாகப் பிரசாரம் செய்யாதவர், இப்போது பா.ஜ.க-வின் வெற்றிகளைத் தடுத்து நிறுத்திவிடுவோம் என்கிறார். கட்சியில் கொஞ்ச நஞ்சமிருக்கும் தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ளவே, தற்போது பா.ஜ.க எதிர்ப்பை கையிலெடுத்திருக்கிறார். ஆனால் இனி, மாயாவதியின் பேச்சுகளை பகுஜன் சமாஜ் தொண்டர்களே நம்பமாட்டார்கள்'' என்கிறார்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/5yQuxIt
0 Comments