கேரளா: தள்ளுவண்டிக் கடையில் உணவுக்காகத் தகராறு; துப்பாக்கிச் சூட்டில் ரோட்டில் சென்றவர் பலி!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூலமற்றத்தைச் சேர்ந்தவர் பிலிப் மார்டின்(34). இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கொரோனாவுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியவர். இந்த நிலையில், பிலிப் மார்ட்டின் மூலமற்றம் அசோகா விலக்கு பகுதியில் உள்ள ரோட்டோர தள்ளுவண்டிக் கடை ஒன்றுக்கு நண்பருடன் சாப்பிடச் சென்றுள்ளார். இரவு 10:30 மணிக்கு உணவு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்துகொண்டிருந்துள்ளார்.

சனல்பாபு

ஆனால் கடையின் உரிமையாளரான பெண் பார்சல் வாங்க வந்தவர்களுக்கு மட்டுமே உணவை வழங்கி கொண்டிருந்துள்ளார். இதையடுத்து உணவு அனைத்தும் தீர்ந்துவிட்டது என பிலிப் மார்ட்டினிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து கடை உரிமையாளருக்கும், பிலிப் மார்டினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகே இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து பிலிப் மார்டினைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பிலிப் மார்டின் பயன்படுத்திய துப்பாக்கி

இதில் ஆத்திரமடைந்த பிலிப் மார்டின் அருகே உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே அவர் தாயார் பிலிப் மார்டின் முகத்தில் ரத்தம் வடிவதைப் பார்த்து மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் தன்னை தாக்கியவர்களை மிரட்ட வேண்டும் என்ற நோக்கில் வீட்டிலிருந்த இரட்டைகுழல் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு காரில் மீண்டும் அந்த கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்தவர் கற்கள், கட்டைகளை கொண்டு மார்டின் காரைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

கேரள போலீஸார் விசாரணை

இதனால் மிகவும் ஆத்திரமடைந்த மார்டின், தான் எடுத்துவந்திருந்த துப்பாக்கியைக் கொண்டு வானத்தில் சுட்டுள்ளார். அதைக் கண்டு அங்கிருந்தவர்கள் பயந்து ஓடியுள்ளனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவர்கள் தன்னைத் தாக்க வருவதாக நினைத்த பிலிப் மார்ட்டின், அவர்களை நோக்கி கண்மூடிதனமாக சுட்டுள்ளார். அதில், பைக்கை ஒட்டி வந்த சனல்பாபு, பிரதீப் புஸ்கரன் ஆகியோர் மீது குண்டுகள் பாய்ந்தன. இதில் தனியார் பஸ் கன்டக்டராக பணியாற்றி வந்த சனல்பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரதீப் புஸ்கரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றும் துப்பாக்கி சூட்டில் சேதமடைந்தது.

தடயங்கள் சேகரிப்பு

தகவலறிந்த காஞ்சாறு இன்ஸ்பெக்டர் ஸோல்ஜிமோன், பிலிப் மார்டினை கைது செய்து அவருடைய கார், துப்பாக்கியைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றார். மேலும் கடையின் உரிமையாளர் மற்றும் அருகே இருந்தவர்களிடமும் விசாரிக்கின்றனர். மார்டின் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் குண்டுகள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/k6oAOS2

Post a Comment

0 Comments