மது போதையில் மனைவியை அடித்து சித்ரவதை செய்த கணவர்... தாயை காக்க தந்தையை கொன்று சரணடைந்த சிறுவன்

மும்பை காந்திவலி கிழக்கு பகுதியில் வசிப்பவர் சுக்ராம். ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுக்ராம் தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியை அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதுவும் தனது பிள்ளைகள் முன்பே தனது மனைவியை கடுமையான வார்த்தைகளால் திட்டுவது மற்றும் அடிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தார். அவர்களுக்கு 16, 20 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். வழக்கம் போல் சம்பவத்தன்றும் சுக்ராம் குடித்துவிட்டு வந்ததோடு, வீட்டுக்கு மது பாட்டில்களை வாங்கி வந்து வீட்டில் வைத்தே குடித்துக்கொண்டிருந்தார். அதோடு மனைவியிடமும் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். இரவு 8.30 மணிக்கு அவர்களின் மூத்த மகன் வீட்டுக்கு வந்தார். அவர் தனது தந்தையிடம், சண்டையிடுவதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் நிறுத்துவதாக இல்லை. இதனால் கோபத்தில் அவர் வெளியில் சென்றுவிட்டார்.

சித்தரிப்பு படம்

சிறிது நேரத்தில் அவர்களின் இளைய மகன் வீட்டிற்கு வந்தார். அவர் வரும் போது சுக்ராம் தனது மனைவியை கடுமையாக அடித்துக்கொண்டிருந்தார். இதிலிருந்து தனது தாயை காப்பாற்ற மகன் முயன்றார். தனது மனைவியின் கழுத்தை பிடித்துக்கொண்டு தலையை சுவற்றில் மோதச்செய்தார். இதில் தலையிட்ட மகனை பிடித்து சுக்ராம் தள்ளிவிட்டார். இதனால் தனது தாயை காப்பாற்ற மகன் வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து தனது தந்தையை அடித்தார்.

இதனால் கீழே விழுந்த சுக்ராம், சமையல் அறையில் கிடந்த கத்தியை எடுத்து வந்து தாக்க முயன்றார். உடனே அவரிடமிருந்து கத்தியை பிடுங்கி அவர் மீதே மகன் வீசினார். இதில் கத்தி சுக்ராம் கழுத்தில் பட்டு ரத்தம் வந்தது. சுக்ராம் மனைவியும் மயங்கி கிடந்தார். இரவு 11 மணிக்கு மூத்த மகன் தனது தாயார் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார். அவர் எழுந்து பார்த்த போது சுக்ராம் இறந்து கிடந்தார். அதோடு அவர்களின் இளைய மகன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

இது குறித்து சுக்ராம் மனைவி கூறுகையில், ``எங்களுக்கு 1997-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் சரியாக படிக்காத காரணத்தால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. அதோடு அவர் முன்கோபக்காரர். இதனால் அடிக்கடி சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் சண்டை போடுவார். நாளடைவில் மது அருந்திவிட்டு வந்து என்னை அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். எனது மகன்களின் நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து அவருடன் வாழ்ந்து வந்தேன். எனது நடத்தையிலும் சந்தேகப்பட ஆரம்பித்தார். இதனால் அவரின் நடவடிக்கைகள் மேலும் மோசமடைந்தது. நான் வேலை செய்துதான் எனது குடும்பத்தை நடத்தியதோடு, மகன்களின் படிப்பு செலவையும் கவனித்துக்கொண்டேன். நான் மது வாங்க எனது கணவருக்கு பணம் கொடுக்கவில்லையெனில் உடனே என்னை அடிப்பார். இது பக்கத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்தார். சரணடைந்த மைனர் சிறுவனை போலீஸார் சிறுவர் சீர்திருத்த முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர். பெற்றோர்கள் குழந்தைகள் முன்னிலையில் சண்டையிட்டுக்கொள்வதால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக போலீஸார் வேதனை தெரிவித்தனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/t8KHfmT

Post a Comment

0 Comments