`அது நீங்க இல்லையா?' - இன்ஸ்டாகிராமில் 3 மாதமாக கணவன் என நினைத்து சாட் செய்து அதிர்ந்த பெண்

சமூக வலைத்தளங்கள் பிரபலமான பிறகு கணவன் மனைவி கூட அதில் தான் உரையாடிக்கொள்கின்றனர் என்று நகைச்சுவையாக சொல்வதுண்டு. முகம் தெரியாமல் பலர் சமூக வலைத்தளங்களில் பழகி பணத்தையும் இழக்கின்றனர். சமூக வலைத்தள மோசடிகளும் அதிகரித்து இருக்கின்றன. மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் என நினைத்து இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் சாட் செய்து வந்துள்ளார். மூன்று மாதத்திற்கு பிறகே அது தனது கணவர் இல்லை என்று தெரிய வந்து அதிர்ச்சியடைந்தார்.

மும்பை தீன்தோஷி என்ற இடத்தை சேர்ந்த 40 வயது பெண் இன்ஸ்டாகிராமில் தனது கணவர் என்று நினைத்து ஒருவருடன் பழகி வந்தார். இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்து கொண்டனர். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணிடம் அவரின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி இன்ஸ்டாகிராமில் பேசிய நபர் கேட்டார். கணவர் தானே கேட்கிறார் என்று நினைத்து அப்பெண்ணும் தனது அந்தரங்க புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பி வைத்தார். ஆனால் அந்த நபர் மேலும் அதிகமான அந்தரங்க புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

அப்போது அப்பெண் அனுப்ப மறுத்த போது தன்னிடம் இருக்கும் அந்தரங்க படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். உடனே அப்பெண் தனது கணவரிடம் நேரடியாக இது குறித்து கேட்டு சண்டையிட்டார். அதன் பிறகுதான் தன்னுடன் இன்ஸ்டாகிராமில் பேசியது தனது கணவர் இல்லை என்று அப்பெண்ணிற்கு தெரிய வந்தது.

சித்தரிப்பு படம்

இதனால் அதிர்ச்சியடைந்த அத்தம்பதி இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அப்பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகியது அதே கட்டடத்தில் வசிக்கும் 20 வயது வாலிபர் என்று தெரிய வந்தது. அந்த வாலிபருக்கும் அப்பெண்ணிற்கும் இடையே நவராத்திரி விழாவில் ஏற்பட்ட பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே இதற்கு பழிவாங்க அப்பெண்ணின் கணவர் பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு திறந்து, அப்பெண்ணிடம் சாட்டிங் செய்துள்ளார். அப்பெண்ணின் நம்பிக்கையை பெறுவதற்காக அப்பெண்ணின் புரொபைல் போட்டோவை திருடி தனது புரொபைலில் வைத்தார். இதனால் அப்பெண்ணும் நம்பினார். அவரிடம் போலீஸார் விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதே போன்று மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் ஜிமெயில் கணக்கை ஹேக் செய்து அவரின் சாட்டிங் விபரங்களில் திருத்தம் செய்து, அதனை அப்பெண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு மர்ம நபர் ஒருவர் அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அப்பெண் கொடுத்துள்ள புகாரில், கடந்த ஜனவரி மாதம் தனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், இப்போது தனது ஜிமெயில் கணக்கும் ஹேக் செய்யப்பட்டு அதில் இருந்த சாட்டிங் விபரங்கள் திருடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஹேக்கிங்

தனது மெயிலில் இருக்கும் சாட்டிங் விபரங்களை திருடி அதில் திருத்தம் செய்து தனக்கு தெரிந்தவர்களுக்கு மர்ம நபர் அனுப்பி இருக்கிறார். இதனால் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் தங்களது திருமணத்தை ரத்து செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இந்த ஹேக்கிங் விவகாரத்தில் தன்னுடன் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவருக்கு தொடர்பு இருக்கும் என்று சந்தேகப்படுவதாகவும் கூறும் அவர், அவர் தன்னிடம் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது கோரிக்கையை நான் நிராகரித்துவிட்டேன். எனவே அவர் என்னை சித்ரவதை செய்ய ஆரம்பித்துவிட்டார் என்றும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பெண்கள் ஆன்லைனில் யாருடனும் பழகும் போது எதிரில் இருப்பது யார் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு பழகவேண்டும் என்று போலீஸார் கேட்டுக்கொண்டனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/fxX5reF

Post a Comment

0 Comments