வனவிலங்குகள் அபாயம், பாழடைந்த கட்டடம், ஒழுகும் மழைநீர்; கேரளாவில் உள்ள ஒரே தமிழக அரசுப்பள்ளி அவலம்!

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் தமிழக அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள ஒரே தமிழக அரசுப் பள்ளி என்ற பெருமை இந்தப் பள்ளிக்கு உண்டு. இப்பள்ளி தென்தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கக் கூடிய முல்லைப்பெரியாறு அணை நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தேக்கடி படகுத்துறை அருகே அமைந்துள்ளது.

தேக்கடி அரசு தொடக்கப் பள்ளி

முல்லைப்பெரியாறு அணையில் பணியாற்றிய தமிழக ஊழியர்களுக்காக 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டது தேக்கடி அரசுத் தொடக்கப்பள்ளி. ஆரம்பக் காலங்களில் 40 முதல் 50 மாணவர்கள் வரை இப்பள்ளியில் பயின்றுவந்தனர். தற்போது இப்பள்ளியில் 4 மாணவர்கள், 8 மாணவிகள் என மொத்தம் 12 பேர் மட்டுமே பயின்று வருகின்றனர். இவர்களுக்கு ஒரு தலைமையாசிரியர் மற்றும் ஓர் ஆசிரியை வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.

பொதுவாக தேக்கடி ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 6 மாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாக மழை பெய்யும் சூழலைக் கொண்டது. இத்தகையை சூழலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளியின் மேற்கூரையில் தொடர்மழை மற்றும் காற்றால் மரங்கள் விழுந்து கூரைகள் சேதமடைந்தன. இதையடுத்து மழை பெய்யும் போதெல்லாம், மேற்கூரையிலிருந்து மழைநீர் ஒழுகி வகுப்பறையில் விழுந்ததால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மாணவர்கள்

மேலும், பள்ளி வனப்பகுதியை ஒட்டியுள்ளதாலும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும் வனவிலங்குகள் அவ்வப்போது பள்ளி வளாகத்திற்கு வருவதால் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடனே பள்ளிக்கு வரும் நிலை இருக்கிறது. பள்ளி கட்டடத்திற்கு செல்வதற்கு படிகட்டு கூட இல்லாததால் மழைக்காலத்தில் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக அட்டை, உன்னி கடிகளால் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுமட்டுமல்லாது பள்ளியின் பின்புறப்பகுதி கட்டடம் முழுவதும் பாழடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. ஜன்னல்கள் உடைந்து தொங்குகின்றன. இதனால் பள்ளியின் முன்பகுதியில் மட்டும் மாணவர்கள் அமர்ந்து படித்து வருகின்றனர்.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமசந்திரனிடம் பேசினோம். ``கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளியை சீரமைத்துத் தரக்கோரி கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் மனு கொடுத்துவிட்டேன். இந்தப் பள்ளி நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலும், கட்டடம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளதால் அவர்களிடமும் மனு அளித்தோம்.

தலைமை ஆசிரியர் ராமசந்திரன்

ஒருசில அதிகாரிகள் நேரடியாக வந்து பார்த்துச் சென்றனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. என்னுடைய சேமிப்பில் இருந்த 30,000 ரூபாயை எடுத்து சில வேலைகளைச் செய்துள்ளேன். மேலும் இந்தப் பள்ளியை சிறப்பான நிலைக்கு கொண்டுவரும் வரையில் வேறு இடத்திற்கு பணியிடமாற்றம் பெற்றும் செல்லக்கூடாது என்ற உறுதியோடு இருக்கிறேன். குழந்தைகளின் நிலையை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

கேரள மாநிலத்தில் உள்ள ஒரே தமிழக அரசுப் பள்ளி என்ற பெருமை கொண்ட பள்ளியை சீரமைத்துப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



from தேசிய செய்திகள் https://ift.tt/H4V6c1R

Post a Comment

0 Comments