ஹலால் விவகாரம்: ``நாங்க வலதுசாரியும் அல்ல; இடதுசாரியும் அல்ல!” -முதல்வர் பசவராஜ் பொம்மை சொல்வதென்ன?

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னை, இந்துக் கோவில்களில் முஸ்லிம்கள் கடை அமைக்க எதிர்ப்பு என பிரச்னைகள் எழுந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் பா.ஜ.க தேசிய நிர்வாகி சி.டி.ரவி முஸ்லிம்களின் ஹலால் இறைச்சி முறையை `ஹலால் உணவு பொருளாதார ஜிஹாத்’ என்று கூறியது மீண்டும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதற்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, ``இது மாற்று மதத்தினரின் நம்பிக்கையைக் கெடுக்கும் வகையில் இருக்கிறது" என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து பரபரப்பாகிவரும் இந்த ஹலால் பிரச்னை குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ``ஹலால் பிரச்னையில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துவருவதால் மாநில அரசு அது குறித்து கவனத்தில் கொள்ளும்” என செய்தியாளர்களிடத்தில் நேற்று பேசியுள்ளார்.

பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி

தொடர்ந்து பேசிய பசவராஜ் பொம்மை, ``ஹலால் பிரச்சினை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. ஹலால் என்பது நடைமுறையில் இருக்கும் ஒன்று. அதை நாம் ஆய்வு செய்யவேண்டும். இப்போது அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுதுவதை நானும் பார்க்கிறேன். இதனை மாநில அரசு நிச்சயம் கவனத்தில் கொள்ளும். எனது அரசாங்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் வலதுசாரியும் அல்ல, இடதுசாரியும் அல்ல. நாங்கள் வளர்ச்சிப் பிரிவு மட்டுமே" என்று கூறியிருந்தார்.

மேலும் இந்த ஹலால் பிரச்னை குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே, ``அவர்களிடம்(பா.ஜ.க) மக்களுக்கு எடுத்துச் செல்ல எந்தப் பிரச்னையும் இல்லை. எனவே இப்போது ஹலால் இறைச்சி போன்ற பிரச்னைகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் கர்நாடகாவை உத்தரப்பிரதேசமாக மாற்ற நினைக்கின்றனர்" என பா.ஜ.கவை சாட்டியிருந்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/sFhbocd

Post a Comment

0 Comments