``தமிழக முதல்வர் கேரள முதல்வருடன் தனக்குள்ள செல்வாக்கையும், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான நெருக்கத்தையும் பயன்படுத்தி முல்லைபெரியாறு அணையில் தமிழக உரிமையை நிலை நாட்ட வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
இது தொடர்பாக பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``முல்லைபெரியாறு அணையில் வழக்கமான பராமரிப்புப் பணிகளை செய்வதற்கு கேரள அரசு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து அண்ணையில் அணை தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் தமிழக பொறியாளர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ச்சியாக அணை விவகாரத்தில் தமிழக உரிமைகளை பறிக்கும் விதமாக கேரள அரசு செயல்பட்டு வருகிறது என தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில், `முல்லைபெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் விவகாரத்தில் தமிழக முதல்வர் கேரள முதல்வருடன் உள்ள தோழமையைப் பயன்படுத்தி தீர்வு காண வேண்டும்.
முல்லை பெரியாறு அணைப் பகுதியில் மத்திய நீர்வள ஆணையத்தின் செயற்பொறியாளர் தலைமையில் 5 பேர் கொண்ட துணைக்குழு பார்வையிட்டது. இந்தத் துணைக் குழுவில் தமிழகம் சார்பில் 2 பொறியாளர்கள், கேரளா சார்பில் 2 பொறியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். துணைக்குழு அணையைப் பார்வையிட்டு முடித்ததும் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அணையைப் பராமரிக்கும் பணிகளை தமிழகம் மேற்கொள்ள மேற்பார்வைக்குழு அனுமதி அளித்துள்ளதை தமிழக பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தமிழக பொறியாளர்கள் பராமரிப்புப் பணிக்கு தேவையான கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்லமுயன்றபோது கேரள வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்ததையும் சொல்லியிருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து, வெறும் அணையை மட்டும் பார்வையிட்டுவிட்டு கூட்டத்தை நடத்துவது அர்த்தமற்றது. பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் குறிப்பிட்டு கூட்டத்தைவிட்டு தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதையடுத்து 5 நிமிடங்களில் அந்தக்கூட்டம் முடிந்துள்ளது. துணைக்குழுவில் தலைவராக இருக்கக்கூடிய மத்திய நீர்வள ஆணையத்தின் செயற்பொறியாளர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை சுட்டிக்காட்டி கேரள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகம் அணை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவிடாமல் கேரள அரசு தொடர்ந்து தடுத்துக் கொண்டே இருப்பது தமிழக உரிமையை பறிக்கும் செயலாகும். ஏற்கெனவே கேரளா அமைச்சர்களும், அதிகாரிகளும் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது, ஆய்வு செய்வது, அணையின் நீர்வரத்து உள்ளிட்ட தகவல்களைப் பெற கேரள அரசு சார்பில் பொறியாளரை நியமிக்க முயற்சி செய்வது என தமிழக உரிமையில் தலையிடுகின்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவது கண்டனத்திற்கு உரியது. இதற்கு தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் தயக்கம் காட்டுவது வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு தமிழகம் மீது தமிழர்களும் மீதும் அக்கறையில்லை என்பதை காட்டுகிறது. தி.மு.க அரசும் இந்த பிரச்னையில் தீவிரம் காட்டவில்லை.
அண்டை மாநிலத்தில் தோழமை கட்சியின் ஆட்சி நடக்கிறது என்றால் தோழமை உணர்வுடன் பேசி தமிழக உரிமையை, தமிழக அரசு நிலைநாட்டியிருக்க வேண்டும். தமிழக முதல்வர் கேரள முதல்வருடன் தனக்குள்ள செல்வாக்கையும், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான நெருக்கத்தையும் பயன்படுத்தி முல்லை பெரியாறு அணையில் தமிழக உரிமையை நிலை நாட்ட வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சென்னையில் நடந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் வரலாற்று நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், ``கேரளா தமிழகம் இடையே நீண்ட கால உறவு இருக்கிறது. தமிழக மக்களும், கேரள மக்களும் இந்த மண்ணின் மைந்தர்கள். நம்மை பிரிக்கின்ற சக்திகளுக்கு எதிராக நாம் இணைந்து போராட வேண்டும்'' எனப் பேசியதைத் தொடர்ந்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/KCRiqHW
0 Comments