கதகளி, வெளிர் சந்தன நேரியல் சேலை, செண்டைமேளம், களரி வரிசையில் `புட்டு' உணவு கேரள பாரம்பர்யத்தை பறைசாற்றும் அடையாளம். புட்டு உடன் பயறு, பப்படம், கூடவே கடலைக்கறி என விதவிதமாகச் சேர்த்து ருசித்து சாப்பிடுவார்கள் கேரளவாசிகள். அசைவ கறிகளை சேர்த்தோ அல்லது பழங்களை சேர்த்தோ புட்டு சாப்பிடுவார்கள். கேரள மாநிலத்தில் பெரும்பாலான ஹோட்டல்களில் புட்டு முக்கியமான உணவாக கிடைக்கும். கேரள வீடுகளில் காலை, இரவு நேரங்களில் சிற்றுண்டியாக புட்டு இடம்பெறுவதை பார்க்க முடியும்.
கேரளாவின் மாநில உணவு எனச் சொல்லும் அளவுக்கு பிரபலமானது புட்டு. கேரள உணவில் இருந்து புட்டை பிரித்து பார்க்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். குழாய் புட்டுதான் கேரளாவில் பிரபலம். சிறுதானிய புட்டு போன்று விதவிதமான புட்டுகள் வந்தாலும் கேரளாவில் அரிசி புட்டுக்குத்தான் மவுசு.
அப்படிப்பட்ட புட்டு பற்றி கோழிக்கோடு மாவட்டம் முக்கத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவன் எழுதிய கட்டுரை இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
கோழிக்கோடு மாவட்டம் முக்கம் மாம்பற்ற பகுதியைச் சேர்ந்த ஜோஜி ஜோசப், தியா ஜேம்ஸ் ஆகியோரின் மகன் ஜெயிஸ் ஜோசப். மூன்றாம் வகுப்பு படித்துவரும் ஜெயிஸ் ஜோசப்புக்கு ஸ்கூலில் மாதிரி தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வினாத்தாளில் `பிடிக்காத உணவு' என்ற தலைப்பில் கட்டுரை எழுதச் சொல்லி ஒரு கேள்வி வந்துள்ளது. `எனக்குப் பிடிக்காத உணவு புட்டு' என்ற தலைப்பில் மாணவன் ஜெயிஸ் ஜோசப் கட்டுரை எழுதியுள்ளார். மாணவன் எழுதிய கட்டுரையில், ``கேரள உணவான புட்டு அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது. புட்டு மிகவும் எளிதாக தயாரிக்கலாம்.
அதனால்தான் என் அம்மா தினமும் காலை உணவாகப் புட்டு தயாரிக்கிறார். தயாரித்து ஐந்து நிமிடத்திலேயே புட்டு பாறை போன்று இறுகிவிடுகிறது. அதன்பிறகு புட்டை என்னால் சாப்பிட முடியாது. புட்டை தவிர வேறு சிற்றுண்டி தயாரித்து தரச்சொல்லிக் கேட்டால் அம்மா செய்து கொடுக்கமாட்டார். இதனால் நான் சாப்பிடாமல் பட்டினி கிடப்பேன். சாப்பிடாமல் இருப்பதை பார்த்து அம்மா என்னை திட்டுவார், நான் அழுவேன். புட்டு உறவுகளை உடைக்கிறது" இவ்வாறு மாணவன் அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார்.
மாணவன் ஜெயிஸ் ஜோசப்பின் விடைத்தாளை திருத்திய ஆசிரியர் `எக்ஸலன்ட்' என மதிப்புரை இட்டிருக்கிறார். புட்டு பற்றி மாணவன் எழுதிய கட்டுரையும், அவர் புகைப்படமும் சமூக வலைதளத்தில் பகிரப்பட, அது வைரல் ஆனது.
மலையாள நடிகர் உன்னி முகுந்தன் தனது முகநூல் பக்கத்தில் மாணவன் விடைத்தாளுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்ய, அது இன்னும் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/LHFV67m
0 Comments