தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது கேரள மாநிலத்தின் வயநாடு. வனப்பகுதிகள் அடர்ந்த வயநாட்டின் மானந்தவாடி சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், மானந்தவாடி அருகில் உள்ள குருக்கன்மூலா பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஊருக்குள் புகுந்த புலி ஒன்று 17 கால்நடைகளை தாக்கி வந்தது. கேரள வனத்துறையினர் அந்தப் புலியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அந்தப் புலி யார் கண்ணிலும் தென்படாமல் இருந்து வந்தது. சமீபத்தில் மீண்டும் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடத் தொடங்கியது.
மனிதர்களைத் தாக்குவதற்கு முன்பு அந்தப் புலியைப் பிடிக்க வலியுறுத்தி உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு அழுத்தம் கொடுத்தனர். அதன்பிறகு புலியை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் களமிறங்கிய கேரள வனத்துறையினர், தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
கள்ளியோடு பகுதியில் அந்தப் புலி மறைந்திருந்ததை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து புலியை சுற்றிவளைத்ததும், கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி புலியைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிறகு வனத்துறை ஊழியர்கள் ஒரு வழியாக கூண்டுக்குள் அடைத்து வாகனத்தில் ஏற்றினர்.
இந்தப் புலி பிடிப்பட்டது குறித்து பேசியுள்ள வயநாடு வனத்துறையினர், ``சுமார் 4 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் புலியின் முன் காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அதனால்தான் வேட்டைத் திறனை இழந்திருக்கிறது. மற்ற புலியுடன் ஏற்பட்ட மோதலில் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம். நான்கு மாதங்களாக காயத்துடன் உலவியதால் உடல் நலிந்து காணப்படுகிறது. இந்தப் புலியை சுல்தான்பத்தேரி பகுதியில் உள்ள வனவிலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளித்து வருகிறோம்" என்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/ZoNgxf0
0 Comments