இந்தியாவில் விஐபி-க்களை தாக்க சிறப்பு படை? - தாவூத் சகோதரனிடம் விசாரிக்கும் அமலாக்கப்பிரிவு!

தேசிய புலனாய்வு ஏஜென்சி சமீபத்தில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுக்கு எதிராக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தது. அதன் அடிப்படையில் பணமோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவு மும்பையில் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிம் சகோதரர் இக்பால் கேஷ்கரை தங்களது காவலில் எடுத்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. மிரட்டி பணம் பறித்த வழக்கில் இக்பால் கேஷ்கர் கைது செய்யப்பட்டு தானே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். `டி கம்பெனி' என்ற பெயரில் சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களில் தாவூத் இப்ராஹிம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சி, தீவிரவாதம் மட்டுமல்லாது அதற்கு தேவையான பணத்தை கடத்துவது, போதைப்பொருள்களை கடத்துவது, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

முக்கிய பிரமுகர்களை தாக்க தனிப்படை

மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் அரசியல்வாதி, தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை தாக்கி வன்முறையை ஏற்படுத்துவதற்காக தாவூத் இப்ராஹிம் சிறப்பு குழுவை அமைத்துள்ளான். அது குறித்து விசாரிப்பதற்காகத்தான் இக்பால் கேஷ்கரை தங்களது காவலில் ஒப்படைக்கவேண்டும் கூறி அமலாக்கப்பிரிவு தங்களது காவலில் எடுத்திருக்கிறது.

தாவூத் இப்ராஹிம்

அதோடு இக்பால் கேஷ்கர் இந்தியாவிற்கு வந்த பிறகு தனது சகோதரன் பெயரைப் பயன்படுத்தி பில்டர்கள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் வசூலித்து இருப்பதாகவும், தாவூத் இப்ராஹிம் இடமிருந்து அடிக்கடி தகவல்களை பெற்றதாகவும் அமலாக்கப்பிரிவு கோர்ட்டில் தெரிவித்துள்ளது. தாவூத் இப்ராஹிம் இந்தியாவை விட்டுச் சென்றுவிட்டாலும், இந்தியாவில் தனது குற்றச்செயல்களை தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மூலம் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறான். அனீஸ் இப்ராஹிம் ஷேக், சோட்டாசகீல், ஜாவேத் பட்டேல், டைகர் மேமன் மற்றும் இறந்துபோன இக்பால் மிர்ச்சி, ஹசீனா பார்கர் போன்றவர்கள் மூலம் தாவூத் தொழில் செய்து வந்ததால், அவர்களது பெயர்களையும் தேசிய புலனாய்வு ஏஜென்சி தனது புதிய முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/X95Wb4c

Post a Comment

0 Comments