தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்பட எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவருகிறது. சில மாநிலங்களில் இந்தப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், ஆளுநரை நீக்குவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என்று கேரள அரசு கலகக் குரல் எழுப்பியிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு கேரளாவில் இருக்கிறது. அங்கு சி.ஏ.ஏ விவகாரம் முதல் பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதுவரை, மாநில அரசின் முடிவுகளுக்கு எதிராக ஆளுநர் ஆரிப் முகமது கான் செயல்பட்டுவருவதாக தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது.
மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸையும் இணைத்துக்கொண்டு இடதுசாரிகள் கேரளாவில் போராட்டங்களை நடத்தினர். சி.ஏ.ஏ-வைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று 11 மாநில முதல்வர்களுக்கும் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். சி.ஏ.ஏ-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கும் தொடர்ந்தது.
கேரளா அரசின் செயல்பாடுகளால் கொந்தளித்த ஆளுநர் ஆரிப் முகமது கான், ``எல்லாவற்றையும் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்” என்றார். சி.ஏ.ஏ-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசின் சார்பில் வழக்கு தொடர்வது குறித்து தன்னிடம் மாநில அரசு ஆலோசிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றியே தீர வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
சமீபத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே சொற்போர் நடந்தது. கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபிநாத் ரவீந்திரன் மறுநியமனம் செய்யப்பட்டார். அது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆரிப் முகமதுகான் காட்டமான கடிதம் ஒன்றை எழுதினார்.
அந்த கடிதத்தில், “பல்கலைக்கழகங்களில் அரசியல் ரீதியான நியமனங்களுக்கு என்னைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முதல்வரே வேந்தராகலாம். அரசியல் ரீதியான காரணத்திற்காக அவருடைய ஆட்களை நான் நியமிக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். என்னால் இனி அதைச் செய்ய முடியாது. பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்து, தனிப்பட்ட முறையில் வேந்தர் பதவியைப் பெற நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். இதன் மூலம் அரசை சார்ந்திருக்காமல் உங்கள் அரசியல் நோக்கங்களை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும்” என்று கொந்தளித்தார் ஆளுநர்.
மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இத்தகைய மோதல்கள் தொடரும் நிலையில், மாநில ஆளுநரை நீக்குவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. மாநிலத்தில் ஆளுநரின் தேவை சம்பந்தமாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
‘அரசியல் சாசன ரீதியில் மாநிலங்களில் ஆளுநர் பதவி முக்கியமானது. அதனால், ஆளுநரைத் தேர்வுசெய்வதற்கான அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்’ என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டை தற்போது கொடியேறி பாலகிருஷ்ணன் வலியுறுத்தியிருக்கிறார்.
மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பான அறிக்கையை அளிப்பதற்காக மதன் மோகன் புன்சி ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த ஆணையத்திடம் ஆளுநர் நியமனம் தொடர்பான கருத்தை கேரளா அரசு கடந்த வாரம் தெரிவித்தது. அதில், அரசியல் சாசனத்தின் மாண்புகளைக் கடைப்பிடிக்க ஆளுநர் தவறினால், அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேரளா அரசு கோரியுள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் நியமனம் தொடர்பான கேரளா அரசின் நிலைப்பாடு பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் பேசினோம்.
``மாநிலத்தில் ஆளுநர் பதவி இருக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு. ஏனெனில், ஏதோவொரு காரணத்துக்காக மாநில அரசு கவிழும் சூழலில், மாநில அரசுக்கு ஒரு தலைமை இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆளுநர் பதவி அவசியம் என்று சொல்லும் அதே நேரத்தில், ஆளுநரை மத்திய அரசு நியமிக்கக்கூடாது என்று நாங்கள் சொல்கிறோம். மாநில அரசுதான் ஆளுநரை நியமிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலமாகத்தான் மக்களின் கருத்துகள் பிரதிபலிக்கப்படுகின்றன என்று அரசியல் சட்டம் கூறுகிறது. அந்த வகையில், மக்களை விருப்பத்தை மாநில அரசு பிரதிபலிக்கிறது. அப்படியிருக்கும்போது, அதற்கு எதிராக ஆளுநர் செயல்படுவது ஏற்கக்கூடியதல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட கூடுதலான அதிகாரம் ஆளுநருக்கு இருப்பது எந்த வகையிலும் சரியானது அல்ல.
ஆளுநர் பதவிக்கு மூன்று பெயர்கள் கொண்ட பட்டியலை மத்திய அரசு அனுப்ப வேண்டும். அதிலிருந்து மாநில அரசு தேர்வுசெய்யும் ஒருவரைத்தான் நியமிக்க வேண்டும். அதுபோல, அரசியல் சாசனத்தின் மாண்புகளைக் கடைப்பிடிக்க தவறுவது போன்றவற்றில் ஆளுநர் ஈடுபட்டால், அந்தப் பதவியில் நீடிப்பதற்கான தகுதியை அவர் இழந்துவிடுகிறார். எனவே, அந்த ஆளுநரை நீக்குவதற்கான அதிகாரத்தை மாநில அரசு வழங்க வேண்டும். ஒரு மாநிலத்தில் அசைக்க முடியாத ஒரு நபராக, அதீத அதிகாரம் பெற்ற ஒருவராக ஆளுநர் இருக்க முடியாது” என்கிறார் கனகராஜ்.
from தேசிய செய்திகள் https://ift.tt/F0Dz41a
0 Comments