ஹிஜாப் விவகாரம்:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூருவில் அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிராக அங்குள்ள இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அந்த கல்லூரி இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள், குல்லா, ஹிஜாப், பருதா, புர்கா போன்றவை அணிந்து வரத் தடை விதித்தது. இதற்கு கடும் எதிப்பு கிளம்பியது. தொடர்ந்து, உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரியிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனை எதிர்க்கும் அந்த மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதே வேளையில், கல்லூரி நிர்வாகம் தங்களின் உடை விவகாரத்தில் தலையிடுவதாகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதே வேளையில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவி தூண்டும், மாணவிகள் காவி ஷாலும் அணிந்து கல்லூரிக்கு வருகை புரிந்தனர். இதனால், பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இடைக்கால உத்தரவு:
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. மேலும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சைபுனிசா மொகிதீன் காஜி என்ற பெண் நீதிபதியும் இடம்பெற்றிருந்தார். இரண்டு தரப்பு விதங்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். வழக்கறிஞர்களின் வாதம் முடிந்ததுமே வழக்கை பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள்.
அப்போது பேசிய நீதிபதிகள், ``இந்த விவகாரம் மீது விசாரித்து முடிவெடுக்கும்வரை, மனுதாரர்கள் ஹிஜாப், காவித்துண்டு அல்லது வேறு எந்த மத ஆடைகளையும் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். நாங்கள் இந்த விஷயத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்புகிறோம். ஆகவே, மத அடையாளத்தைக் கல்வி வளாகத்துக்குள் கடைப்பிடிக்க நினைக்கும் அனைவரையும், நாங்கள் முடிவெடுக்கும் வரை இந்த வாய்மொழி உத்தரவின் மூலம் கட்டுப்படுத்துகிறோம். மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வரவேண்டும். அவர்களின் கல்வியைப் பாதிக்கும் வகையில் எந்த போராட்டமும் நடத்தக்கூடாது" என்று கூறினார்கள்.
Also Read: ஹிஜாப்க்கு எதிராக காவி துண்டு... அதிகரிக்கும் எதிர்ப்பு! - என்ன நடக்கிறது கர்நாடகாவில்?
தேசிய பிரச்னை ஆக்க வேண்டாம்:
கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்திருக்கும் இடைக்கால உத்தரவைத் தடை செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், `இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வியைத் தொடர அனுமதிக்காததின் பொருட்டு அவர்களின் சுதந்திரத்தைக் குறைக்கக் கர்நாடக உயர் நீதிமன்றம் முயல்கிறது' என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது..
அப்போது பேசிய, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, `` இந்த விஷத்தைத் தேசிய அளவில் பரப்ப முயலவேண்டாம். சரியான நேரத்தில் நாங்கள் தலையிடுவோம். இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம். என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். இந்த விஷத்தை டெல்லிக்குக் கொண்டுவர வேண்டுமா என்று சிந்தியுங்கள். தவறு நடந்தால், நாங்கள் நீதியைக் காப்போம்" என்று தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
Also Read: ஹிஜாப் வழக்கு: `உங்கள் உரிமை காக்கப்படும்; ஆனால்..!'- உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
from தேசிய செய்திகள் https://ift.tt/DPVBKRd
0 Comments