மும்பை: `மாநகராட்சி பள்ளிகளில் பகவத்கீதை வாசிக்கப்பட வேண்டும்' - பாஜக மனு!

மும்பையில் இந்தி, மராத்தி, உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்பதற்காக 15-க்கும் மேற்பட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மும்பையில் மாநகராட்சி பள்ளிகளில் பகவத் கீதை பாராயணம் செய்யவேண்டும் என்று பா.ஜ.க திடீரென கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் கவுன்சிலர் யோகிதா கோலி, மேயர் கிஷோரியிடம் கடிதம் மூலம் தீர்மானம் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதோடு சேர்த்து பகவத் கீதை புத்தகம் ஒன்றையும் கொடுத்தார். இது தொடர்பாக யோகிதா அளித்த பேட்டியில், ``பகவத் கீதை நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்கிறது. எனவே எதிர்கால சந்ததிகள் பயனடையும் வகையில் பகவத் கீதை வாசிக்கப்படுவது தொடங்கப்படவேண்டும்.

மேயரிடம் மனு கொடுக்கும் யோகிதா

பகவத் கீதை 5 ஆயிரம் ஆண்டுகளாக மக்களுக்கு வழிகாட்டுகிறது. மாநகராட்சியின் கல்விக்கமிட்டி உறுப்பினராக இருக்கும் நான் மாநகராட்சி பள்ளிகளில் பகவத் கீதை வாசிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன். மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை நான் கொண்டு வந்திருப்பதாக கருதினால் அது தவறான ஒன்றாகும்" என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைத்ததிலிருந்து சிவசேனா இந்துத்துவத்தை கைவிட்டுவிட்டதாக பா.ஜ.க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. பா.ஜ.க உறுப்பினர் கொண்டு வந்திருக்கும் தீர்மானம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரவிராஜாவிடம் கேட்டதற்கு, ``இது பா.ஜ.க-வின் தேர்தல் யுக்தி. கடந்த 5 ஆண்டுகளில் ஏன் இந்த மசோதாவை தாக்கல் செய்யவில்லை. பகவத் கீதை மட்டுமல்லாமல் ராமாயாணம், மகாபாரதத்தையும் மாநகராட்சி பள்ளியில் கற்றுக்கொடுக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், யோகிதாவின் கோரிக்கையை நிராகரிக்கவேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி மேயரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/XoRnCkN

Post a Comment

0 Comments