மும்பை, காந்திவலியை சேர்ந்தவர் நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2018-ம் ஆண்டு, மைனர் பெண்ணான இவர் தன் வளர்ப்புத் தந்தை தன்னை பாலியல் ரீதியாகத் தொல்லை செய்ததாகவும், சித்ரவதை செய்ததாகவும் தன் தாயிடம் கூறி, அவர் மூலம் போலீஸில் புகார் செய்தார். உடனே போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணின் வளர்ப்புத் தந்தையை கைது செய்தனர். மைனர் பெண்ணையும் போலீஸார் பெண்கள் முகாமிற்கு ஆறு மாதங்கள் அனுப்பி வைத்தனர்.
பெண்கள் முகாமில் இருந்தபோது மைனர் பெண் தனது தவற்றை உணர்ந்து, தன் தந்தை தன்னை பாலியல் தொல்லை செய்யவில்லை என்று போலீஸில் தெரிவித்தார். அதோடு தான் கொடுத்த வாக்குமூலத்தையும் திரும்பப் பெற்றார்.
அப்பெண் புதிதாகக் கொடுத்த வாக்குமூலத்தில், ``நான் அதே பகுதியில் 20 வயது வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்தேன். ஆனால் அது என் தந்தைக்குப் பிடிக்கவில்லை. நான் காதலித்து வந்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று கூறி என்னை அந்த வாலிபரிடமிருந்து ஒதுங்கி இருக்கும்படி கூறினார்.
ஒரு முறை நானும் அந்த வாலிபரும் கைகோத்தபடி மார்க்கெட்டில் நடந்து வந்து கொண்டிருந்தபோது என் வளர்ப்புத் தந்தை என்னைப் பார்த்து, என் காதலனை கண்டபடி திட்டி அவமதித்தார். என் காதலனை அவமதித்ததால் கோபத்தில் என் தந்தையை பழிவாங்க போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் செய்தேன்" என்று தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வாலிபரையும் அழைத்து போலீஸார் விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டனர். இதையடுத்து நான்கு மாதம் சிறையில் இருந்த அப்பெண்ணின் தந்தை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் வழக்கு விசாரணை மட்டும் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது அவ்வழக்கில் இருந்து அப்பெண்ணின் தந்தை கோர்ட்டால் விடுவிக்கப்பட்டுள்ளார். அதோடு அப்பெண்ணையும் தற்போது பெற்றோர் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/D9kyG7E
0 Comments