கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (38). இவர் தன் மனைவி ஆஷா சுரேசுடன் கோட்டயம் மாவட்டம் பாலாவில் வசித்து வருகிறார். ஐஸ்கிரீம் பிஸினஸ் செய்துவரும் சதீஷ் நிறைய லாபம் கிடைத்ததால் தனியாக வீடு கட்டி குடியேறினார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவர் சாப்பிட்டவுடன் உடலில் சோம்பல் ஏற்படுவதை உணர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து சதீஷ் மருத்துவரை அணுகியிருக்கிறார். உடலில் சர்க்கரையின் அளவு குறைந்ததால் சோம்பல் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 நாள்கள் சதீஷ் ஓட்டலில் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்போது அவருக்கு உடலில் எந்த சோர்வும் ஏற்படவில்லை. மறுபடியும் வீட்டில் சாப்பிட்டபோது அவர் உடலில் மீண்டும் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த சதீஷ், மனைவியின் தோழி ஒருவரிடம் இதுபற்றி கூறியுள்ளார். மேலும், மனைவி தனக்கு உணவில் எதாவது கலந்து தருகிறாரா எனவும் பேசி அறிந்து, தன்னிடம் சொல்லும்படி கூறியிருக்கிறார்.
அந்தப் பெண்ணும் ஆஷாவிடம் இது தொடர்பாகப் பேசியபோது, 2015-ம் ஆண்டு முதல் மன நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்தை தன் கணவருக்கு சாப்பாட்டில் கலந்து கொடுப்பதாகவும், அப்போதுதான் கணவன் தன் கட்டுப்பாட்டில் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது அந்த மருந்தின் போட்டோவையும் வாட்ஸ் அப்பில் தோழிக்கு அனுப்பி, 'நீயும் உன் கணவருக்கு கொடுத்துப்பார். நல்ல பலன் தெரியும்' என சொல்லியுள்ளார்.
இதை அந்தப் பெண் சதீஷிடம் கூறியதும், அவர் அதிர்ச்சி அடைந்தார். அதையடுத்து, சதீஷ் இதுபற்றி பாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நன்றாக பிஸினஸ் செய்யும் தன்னை சீர்குலைக்க ஆஷாவும், அவர் குடும்பத்தினரும் சேர்ந்து சதி செய்திருப்பதாக சதீஷ் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குபதிந்து ஆஷாவைக் கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஆஷா தன் கணவனுக்கு மன நோய்க்கு கொடுக்கும் மருந்தை உணவிலும், குடிநீரிலும் கலந்து கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த மருந்து கொடுத்தால் கணவர் தன் கட்டுப்பாடில் இருப்பார் என யூடியூபில் பார்த்து தெரிந்துகொண்டதாக ஆஷா கூறுகிறார். மேலும், இந்த மருந்தை அப்பாவுக்கு, என் அம்மா பலமுறை கொடுத்திருக்கிறார் எனவும் ஆஷா தெரிவித்திருக்கிறார். இப்போது வெளிநாட்டில் இருக்கும் ஆஷாவின் தாய், தந்தையரை அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.
வேறு ஏதாவது ஆதாயத்துக்காக கணவருக்கு ஆஷா அந்த மருந்தை கொடுத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கணவர் தன்னை டார்ச்சர் செய்வதாக பாலா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சமாதானப்படுத்தினர். அதையும் கருத்தில் எடுத்து விசாரணை நடத்துகிறோம். மேலும் வலிப்பு நோய்க்கான மாத்திரையை ஆஷா கணவனுக்கு சாப்பாட்டில் கலந்து கொடுத்திருபதற்கான மருந்து சீட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பாலாவில் உள்ள இரண்டு மருந்தகங்களில் இருந்து இதற்கான மருந்தை மாதம்தோறும் ஆஷா வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாது ஆஷாவை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினால்தான் முழு உண்மையும் தெரியவரும்" என்றார்.
Also Read: கேரளா: `பழங்குடி மாணவிகள்தான் டார்கெட்...' காதல்வலை வீசும் கஞ்சா மாஃபியாக்கள் - பறிபோகும் உயிர்கள்!
from தேசிய செய்திகள் https://ift.tt/rEBAsal
0 Comments