மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அதை சந்திரசேகர் ராவும் ஏற்றுக்கொண்டிருந்தார். அதையடுத்து, இன்று சந்திரசேகர் ராவ் தனது அமைச்சரவை சகாக்கள் சிலருடன் மும்பை வந்திருந்தார். பின்னர், சந்திரசேகர் ராவ் விருந்தில் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து, உத்தவ்தாக்கரேவும், சந்திரசேகர் ராவும் தனிப்பட்ட முறையிலும் சந்தித்துப் பேசிக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது அடுத்து வரும் மக்களவை தேர்தலில் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பதா... வேண்டாமா? என்பது குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
உத்தவ்தாக்கரே இந்த சந்திப்பின் போது முதல் முறையாக தன் மற்றொரு மகன் தேஜஸ் தாக்கரேவை அரசியல் ரீதியான கூட்டங்களில் கலந்து கொள்ளச்செய்தார். முதல்வரின் அரசு இல்லமான வர்ஷாவில் நடந்த இந்த விருந்து மற்றும் பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் சேர்ந்து கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது சந்திரசேகர் ராவ் கூறுகையில், ``மகாராஷ்டிராவில் இருந்து மாற்றத்திற்கான புதிய நல்ல தொடக்கம் ஆரம்பித்திருக்கிறது. இது தேசிய அளவில் எடுத்துச்செல்லப்படும். ஜனநாயகத்தை பாதுகாக்க மாற்றம் அவசியம். எதிர்கால திட்டம் குறித்து விவாதிப்பதற்காக தாக்கரே, தேசிய மற்றும் பிராந்திய கட்சித் தலைவர்களை ஐதராபாத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளேன்" என்றார்.
உத்தவ் தாக்கரே பேசுகையில், ``மத்திய அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது .இது நாட்டிற்கு நல்லதல்ல. மாநிலங்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிப்பது நாட்டிற்கு நல்லதல்ல. மாறுதலுக்கான புதிய முயற்சிக்கு நாம் கடினமாக உழைக்கவேண்டியிருக்கிறது. ஆனால் அது நிச்சயம் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
தெலங்கானாவும், மகாராஷ்டிராவும் 1,000 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லைகளில் இணைந்திருக்கின்றன. ஆனாலும் எந்த வித பிரச்னையும் இல்லாமல் இரு மாநிலங்களும் சுமுக உறவுடன் இருக்கின்றன. சமீப காலமாக சந்திரசேகர் ராவ் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மற்றொரு புறம் பா.ஜ.க-வும், சிவசேனாவும் மகாராஷ்டிராவில் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.க பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அது தோல்வியில் முடிந்துவிடுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பா.ஜ.க-வின் முயற்சியை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். மம்தா பானர்ஜியும் சமீபத்தில் சந்திரசேகர் ராவ் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு போன்செய்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அவர் காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மம்தா பானர்ஜி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை வந்து சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு ஐக்கிய ஜனநாயக கூட்டணியே கிடையாது என்று கூறிவிட்டு சென்றார். மம்தா பானர்ஜியின் இந்த கருத்து சரத்பவாருக்கு ஒத்துப்போகவில்லை. அதேபோன்று உத்தவ் தாக்கரேவும் இப்போது காங்கிரஸ் கட்சியின் தயவில்தான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். எனவே காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு உத்தவ்தாக்கரேவும் சம்மதிக்கமாட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/S8Rg7aF
0 Comments