மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனும், அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனும் திடீரென காணாமல் போயிருக்கின்றனர். இது தொடர்பாக 15 வயது சிறுவனின் தந்தை தன் மகன் கடத்தப்பட்டு விட்டதாக போலீஸில் புகார் செய்திருந்தார். போலீஸார் வழக்கு பதிந்து இரண்டு பேரையும் தேடிவந்தனர். இரண்டு பேரில் 17 வயது சிறுவனிடம் மொபைல் போன் இருந்தது. அதோடு 15 வயது சிறுவன் காணாமல் போனபோது, வீட்டிலிருந்த ரூ.6 லட்சம் பணத்தையும் தன்னுடன் எடுத்துச் சென்று விட்டான்.
வீட்டில் பெற்றோர் திருமணம் ஒன்றுக்கு புறப்பட்டுச் சென்றபோது, தன் சகோதரர்கள் இரண்டு பேரையும் வீட்டிற்குள் பூட்டி கதவை அடைத்துவிட்டு, அந்த 15 வயது சிறுவன் சென்றிருந்தான். சிறுவர்கள் இரண்டு பேரும் நேராக ரயிலில் ஏறி மும்பை குர்லா டெர்மினஸ் சென்றிருக்கின்றனர். குர்லாவிலிருந்து எங்கு செல்வது என்று தெரியாமல் புதிதாக போன் வாங்கலாம் என்று கருதி மலாடு பகுதிக்குச் சென்று புதிதாக ஐபோன் ஒன்றை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கின்றனர்.
17 வயது சிறுவனிடம் ஏற்கெனவே போன் இருந்தது. அந்த போன் சிம்கார்டை எடுத்து ஐபோனில் போட்டு இருவரும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அதோடு அதிலிருந்த சமூகவலைதள கணக்கையும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். அதனால், நாண்டெட் போலீஸார் சிறுவர்கள் இருக்கும் இடத்தை சிம்கார்டு சிக்னல் மூலம் கண்டுபிடித்து இருவரையும் மீட்டனர்.
அதையடுத்து, நாண்டெட் போலீஸார் சிறுவர்களை மும்பை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பணப்பையுடன் அதிர்ஷ்டவசமாக விஷமிகள் யாரிடமும் சிக்கவில்லை என்று மும்பை போலீஸார் தெரிவித்தனர். 15 வயது சிறுவனிடம் விசாரித்தபோது, ``என் தந்தையிடம் புதிய ஆடைகள் வாங்கி கொடுக்கும் படி கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர் வாங்கித்தராமல் என்னிடம் தகராறு செய்துகொண்டே இருந்தார். அதனால், ஆத்திரத்தில் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்" என்று கூறியிருக்கிறான்.
from தேசிய செய்திகள் https://ift.tt/26XdxNV
0 Comments