``காஷ்மீருக்கு வந்தநிலை தமிழ்நாட்டுக்கு வராது என்பதில் என்ன நிச்சயம்?" - உமர் அப்துல்லா

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முதல்முறையாக தன் வாழ்க்கை வரலாற்றை `உங்களில் ஒருவன்' எனும் எனும் தலைப்பில் தானே புத்தகமாக எழுதி இருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழாவானது சென்னை வர்த்தக மைய வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா

தி.மு கழக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் தலைமையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், தி.மு.க எம்.பி கனிமொழி, டி.ஆர். பாலு மற்றும் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மேலும் தி.மு.க அமைச்சர்கள், கழக தொண்டர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா

இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை ஆற்றிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ``எப்படி இருக்க வேண்டும். எதை சாப்பிட வேண்டும். எந்த உடை அணிய வேண்டும் என்பது பற்றி முடிவெடுப்பது அவரவரின் உரிமை. இந்துவாக காவித் துண்டு போட வேண்டுமா? பொட்டு வைக்க வேண்டுமா? அல்லது இஸ்லாமியராக ஹிஜாப் அணிய வேண்டுமா, தாடி வைக்க வேண்டுமா என்பதைப் பற்றி அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். மத அடையாளங்களைப் பின்பற்றுவது தனிமனித உரிமை. ஆனால், தற்போது மொழி, மதம், ஆடை, உணவு சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. இந்தியா ஒற்றுமையில் வேற்றுமை நிறைந்த நாடு. மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவை என்ற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களின் குரலை கேட்காமல் மாநிலம் பிரிக்கப்பட்டது. காஷ்மீருக்கு வந்த நிலை தமிழ்நாட்டுக்கோ, கேரளாவுக்கோ வராது என்பது என்ன நிச்சயம்? மக்களின் ஒப்புதல் இல்லாமல் ஜம்மு காஷ்மீரை பிரித்தனர். பல தலைமுறைகளை கடந்த சொந்தம் ஜம்மு காஷ்மீருக்கும் தமிழகத்திற்கும் இருக்கிறது. ஒரு ஆளுநர் தமிழகத்தை மூன்றாக பிரித்தல் ஏற்க முடியுமா?!" என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/mQBgdDb

Post a Comment

0 Comments