தேசிய அளவில் விவாதமான ஹிஜாப் விவகாரம்... 5 மாநில தேர்தலில் தாக்கம் இருக்குமா?!

ஹிஜாப் விவகாரம்:

கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்குக் கல்லூரி நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய மாணவர்களுக்கு எதிராக இந்து மாணவர்கள் காவி தூண்டும், மாணவிகள் காவி ஷாலும் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நாளுக்கு நாள் பெரிதானது. இதனால், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் உருவானது.

ஹிஜாப்

இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, தற்போது மீண்டும் வகுப்புகள் தொடங்கி இருக்கிறது. இதனிடையே ஹிஜாப் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும்வரை கல்வி நிலையங்களில் மாணவர்கள் எந்த வித மத அடையாள ஆடைகளையும் அணிய கூடாது என நீதிபதிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறியிருந்தது.

தேர்தலில் எதிரொலி?:

கர்நாடக மாநிலத்தில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை நடைபெற்றுவரும் ஐந்து மாநில தேர்தலிலும் எதிரொலிக்குமா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் கான்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி நேரடியாகக் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``ஒரு காலத்தில், இஸ்லாம் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும்போது இன்னல்களுக்கு உள்ளானார்கள். கிண்டல், கேலிகளுக்குப் பயந்து பலர் கல்வி கற்பதையே நிறுத்துக்கொண்டார்கள்.

ஹிஜாப்- காவி ஷால் -கர்நாடகா

இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் நிலைமை தலைகீழ் ஆனது. பெண்களைக் கிண்டல் செய்பவர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர். பெண்களுக்குத் துணிச்சல் வந்துள்ளது. தற்போது உத்தரப்பிரதேசத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் பள்ளிக்கும், கல்லூரிகளுக்கும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் சென்று வருகிறார்கள். பல ஆண்டுகளாக இஸ்லாமியப் பெண்கள் அனுபவித்து வந்த முத்தலாக் என்ற தண்டனையிலிருந்து அவர்களை விடுவித்தது பாஜக தான். பாஜகவின் ஆட்சியில் மட்டும் தான் இஸ்லாமியப் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த நிலைமை தொடர, உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி தொடரவேண்டும்" என்று பேசியிருந்தார். எனினும் நேரடியாக ஹிஜாப் விவகாரம் குறித்து பேசவில்லை.

இதே போல, பஞ்சாப், கோவா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் பல்வேறு கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாகப் பீகார் முதல்வர் நிதீஷ் குமார், `எங்கள் மாநிலத்தில் அனைத்து மத உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படும். இதுபோன்ற விவகாரங்களைப் பெரிதுபடுத்தக் கூடாது. பீகாரில் பள்ளி குழந்தைகள் ஒரே மாதிரியான ஆடைகளை அணிவார்கள். அதுபோன்ற விஷயங்களில் நாங்கள் தலையிடமாட்டோம். அனைவரின் மத உணர்வுகளையும் நாங்கள் மதிக்கிறோம். மாநில அரசு அனைவர்க்கும் சமம்" என்று தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறினார்.

ஹிஜாப் சர்ச்சை

கோவாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி பத்திரிகையர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கர்நாடகாவில் நடைபெற்றுவரும் ஹிஜாப் சர்ச்சை குறித்து கேள்வி கேட்டபோது. `நான் கோவா தேர்தல் பிரசாரம் தொடர்பாக வந்துள்ளேன். எனது பணி குறித்து நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன், மேலும், கோவா மக்களுக்கு எது முக்கியம் என்பதில் கவனம் செலுத்துவேன்" என்று பதில் கூறியிருந்தார். பிரியங்கா காந்தி மாணவிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தேசிய அளவில் ஹிஜாப் விவகாரம் பேசப்பட்டாலும், தேர்தலை சந்திக்கும் மாநிலங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் நேரடியாக அல்லது பிரசார களத்தில் அதில் ஒரு நிலையை எடுக்கவில்லை. பெரும்பாலான தலைவர்கள், மத அரசியலை விட மாணவ மாணவியரின் கல்வி தான் முக்கியம், அதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் இது பேசுபொருள் ஆகியுள்ளது ஒருபக்கம் இருக்க, தமிழகத்தில் நடைபெற்றுவரும் உள்ளாட்சித் தேர்தலில் கூட வேட்பாளர்கள் ஹிஜாப் அணிந்து வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தாலும், என்ன நடக்கிறது, யார் என்ன செய்கிறார்கள் என்பதை மக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதைத் தேர்தல் முடிவுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.



from தேசிய செய்திகள் https://ift.tt/qakNpCM

Post a Comment

0 Comments