உத்தர் அரசியல்: பாபர் மசூதியைக் காப்பாற்றிய முலாயம் சிங்... கைவிட்ட கல்யாண் சிங்|மினி தொடர்|பாகம்-4

மசூதியைக் காக்க முயன்ற முலாயம்!

உத்தரப்பிரதேச அரசியலில் சமகாலத்தில் எதிரெதிர் துருவங்களில் ஓ.பி.சி வகுப்பைச் சேர்ந்த இரண்டு தலைவர்கள் உருவெடுத்தனர். ஒருவர் முலாயம் சிங் யாதவ். இன்னொருவர் கல்யாண் சிங். 1989 சட்டமன்றத் தேர்தலில் செல்வாக்குமிக்க தலைவராக முலாயம் சிங் யாதவ் வளர்ந்தார்.

முலாயம் சிங் யாதவ்

முலாயம் தலைமையிலான ஜனதா தள அரசுக்கு வெளியிலிருந்து அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க விலக்கிக்கொண்டது. ஆனாலும், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் அவர் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். பின்னர், காங்கிரஸ் கட்சியும் ஆதரவை வாபஸ் பெற்றதால், ஆட்சியை அவர் பறிகொடுத்தார். அந்த நேரத்தில், உ.பி அரசியலில் முலாயம் சிங் யாதவ் கிராஃப் உயர்ந்துகொண்டே போனது.

கரசேவகர்கள் மீது துப்பாக்கிச்சூடு!

முலாயம் சிங் யாதவ் ஆட்சியின்போதுதான் அயோத்தி பிரச்னை தீவிரமடைய ஆரம்பித்தது. விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அழைப்பின் பேரில் அயோத்தியை நோக்கி ஏராளமான கரசேவகர்கள் படையெடுத்தனர். 1990-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதியை கரசேவகர்கள் நெருங்கினர். அவர்களால் பாபர் மசூதிக்கு ஆபத்து ஏற்படப்போகிறது என்று உணர்ந்த முதல்வர் முலாயம் சிங் யாதவ், கரசேவகர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார்.

பாபர் மசூதி இடிப்பு

அயோத்தியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் உயிரிழந்ததாக முலாயம் கூறினார். அதை மறுத்த வாஜ்பாய், 56 பேர் உயிரிழந்ததாகக் கூறினார். சமீபத்தில் அயோத்தியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். ``அன்றைக்கு, கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் தெரியுமா..?’’ என்று கேள்வியும் எழுப்பினார் அமித் ஷா.

மண்டல் Vs கமண்டல்!

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை பிரதமர் வி.பி.சிங் அமல்படுத்த முயன்றபோது, அதற்கு எதிராக ஒரு தரப்பினர் களமிறங்கினர். மண்டல் கமிஷனை எதிர்ப்பதற்காக ராமர் கோவில் விவகாரத்தை இந்துத்துவா அமைப்பினர் தீவிரப்படுத்தினர். அதையொட்டி, 1991-ம் ஆண்டு உ.பி சட்டமன்றத் தேர்தலில், கல்யாண் சிங்கை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க முன்னிறுத்தியது.

425 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில், 221 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றது. கல்யாண் சிங் முதல்வரானார். முலாயம் ஆட்சியில் காப்பாற்றப்பட்ட பாபர் மசூதி, கல்யாண் ஆட்சியில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நிகழ்ந்த மசூதி இடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, கல்யாண் சிங் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

கல்யாண் சிங்

1992-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி சமாஜ்வாடி கட்சியைத் தோற்றுவித்தார் முலாயம் சிங் யாதவ். 1993 தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் (பி.எஸ்.பி) சமாஜ்வாடி கட்சி கூட்டணி சேர்ந்தது. சமாஜ்வாடிக்கு 109 இடங்களும் பி.எஸ்.பி-க்கு 67 இடங்களும் கிடைத்தன. இருவரும் சேர்ந்து ஆட்சியமைத்தனர்.

1995-ம் ஆண்டு மே மாதம் ஆட்சியிலிருந்து பி.எஸ்.பி வெளியேறியது. அதனால், முலாயம் சிங் அரசு, மைனாரிட்டி அரசாக மாறியது. அந்த நேரத்தில், விருந்தினர் மாளிகையில் மாயாவதியும் பி.எஸ்.பி எம்.எல்.ஏ-க்களும் சமாஜ்வாடி கட்சியினரால் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு, பா.ஜ.க ஆதரவுடன் மாயாவதி முதல்வர் பதவியைப் பிடித்தார்.

சுழற்சி அடிப்படையில் முதல்வர் நாற்காலி!

1996 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 174 இடங்களில் வெற்றிபெற்றது. பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 1997 ஏப்ரலில், பா.ஜ.க-வும் பி.எஸ்.பி-யும் ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தன. பி.எஸ்.பி-க்கு 67 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். ஆறு மாதங்களுக்கு பா.ஜ.க-வும் அடுத்த ஆறு மாதங்களுக்கு பி.எஸ்.பி-யும் என சுழற்சி முறையில் முதல்வர் பதவியை வகிப்பது என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

மாயாவதி

முதல் ஆறு மாதங்களுக்கு மாயாவதி முதல்வராக இருந்தார். அடுத்து முதல்வராகும் வாய்ப்பு கல்யாண் சிங்குக்கு கிடைத்தது. அதற்கடுத்து பா.ஜ.க-வுக்கான ஆதரவை பி.எஸ்.பி வாபஸ் பெற்றது. அப்போது, பி.எஸ்.பி-யையும் காங்கிரஸ் கட்சியையும் பா.ஜ.க உடைத்தது. அந்த இரு கட்சியிலிருந்தும் வெளியே வந்தவர்கள் பா.ஜ.க ஆட்சியில் பங்கேற்றனர்.

Also Read: உத்தர் அரசியல்: வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த சட்டம் ஒழுங்குச் சம்பவங்கள்| மினி தொடர்|பாகம் - 3

கட்சியிலிருந்து வெளியேறிய கல்யாண் சிங்!

1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆளுநர் ரொமேஷ் பண்டாரி ஆட்சியைக் கலைத்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜகதாம்பிகா பால் முதல்வராகப் பதவியேற்றார் (48 மணி நேரம் முதல்வராக இருந்த ஜகதாம்பிகா பால், தற்போது பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்). அவரது நியமனத்தை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கல்யாண் சிங் வழக்குத் தொடர்ந்தார். அதில் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து கல்யாண் சிங் முதல்வராகப் பதவியேற்றார்.

1998 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி-யில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 58 தொகுதிகளை பா.ஜ.க பிடித்தது. ஆனால், 1999 தேர்தலில் 29 தொகுதிகளே பா.ஜ.க-வுக்கு கிடைத்தன. அந்த காலக்கட்டத்தில் கல்யாண் சிங்குக்கு எதிரான உள்ளடி வேலைகள் பா.ஜ.க-வுக்குள் நடந்தன.

ராஜ்நாத் சிங்

இந்தியாவின் தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், முதல்வர் நாற்காலியைப் பிடிக்க முயன்றார். முதல்வர் பதவியிலிருந்து விலக கல்யாண் சிங்குக்கு அழுத்தம் தரப்பட்டது. அதன் பிறகு, ராம் பிரகாஷ் குப்தா முதல்வராக்கப்பட்டார். பா.ஜ.க-விலிருந்து வெளியேறினார் கல்யாண் சிங். 2000 அக்டோபர் மாதம் ராஜ்நாத் சிங் முதல்வரானார். அதன் பிறகு, அரசியலில் எதிரெதிர் துருவங்களில் இயங்கிய கல்யாண் சிங்கும் முலாயம் சிங் யாதவும் ஒன்று சேர்ந்த காட்சிகளை உத்தரப்பிரதேச அரசியல் களம் கண்டது.

(உத்தர் அரசியல்... அலசுவோம்)



from தேசிய செய்திகள் https://ift.tt/WLe0kU1

Post a Comment

0 Comments