தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளில் முக்கியமானவராக கருதப்படும் அபு சலேம் போர்ச்சுக்கல் நாட்டில் பதுங்கி இருந்தபோது, பாஸ்போர்ட் விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டார். அங்கிருந்து 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவுக்கு அவர் நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தப்படும் போது இந்தியாவுக்கும், போர்ச்சுக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அபு சலேமுக்கு தூக்கு தண்டனை கொடுக்ககூடாது என்றும், 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது, மும்பை சிறையில் இருக்கும் அபுசலேமுக்கு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்படிருக்கிறது.
இந்த நிலையில், அபுசலேம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதில் தனது தண்டனைக்காலத்தை 25 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கக்கூடாது என்றும், போர்ச்சுகல் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் தடா கோர்ட் தீர்ப்பு அமைந்திருப்பதாகவும், அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அபுசலேம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, `மனுதாரர் போர்ச்சுகல் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தடா கோர்ட் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது. அதோடு தண்டனை காலத்தை 2005 அக்டோபர் 12-ம் தேதியில் இருந்துதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. ஆனால், போர்ச்சுகல் அரசு 2003-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி என் மனுதாரரை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. எனவே தண்டனைக்காலத்தை 2003-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதியில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ள விசாரணை நீதிமன்றம் தவறிவிட்டது. போர்ச்சுகல் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி என் மனுதாரரை 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருக்ககூடாது. எனவே சுப்ரீம் கோர்ட் தனது அதிகாரத்தை பயன்படுத்தி என் மனுதாரருக்கு நீதி வழங்கவேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து மத்திய அரசும், மகாராஷ்டிரா அரசும் இந்த விவகாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read: மும்பை: போதைப்பொருள் கடத்தல் வழக்கு! - தாவூத் இப்ராகிம் சகோதரர் இக்பால் மீண்டும் கைது
from தேசிய செய்திகள் https://ift.tt/MzHfhg2cv
0 Comments