உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் சாதி அரசியலுக்கு முக்கியப் பங்கு! - ஏன், எப்படி?

இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பீகார், உ.பி போன்ற கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் சாதியக் கட்டுமானம் மிகவும் இறுக்கமானது. `சாதி’ ஆதிக்கமும், சாதிய ஒடுக்குமுறைகளும், சாதிய வன்முறைகளும் அங்கு அதிகம். அதேபோல, தேர்தல்களில் சாதிகளின் ஆதிக்கமும் அங்கு அதிகம். குறிப்பாக, உ.பி-யில் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் சாதிகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

அமித் ஷா, யோகி, மோடி

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தேர்தல்களைச் சந்திப்பதைக் காட்டிலும், சாதிய ரீதியான அணிதிரட்டலில்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தும். தற்போதுகூட, அடுத்த மாதம் நடைபெறும் உ.பி சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பிரச்னைகள் எதுவும் பிரசாரக் களத்தில் விவாதப்பொருளாக முன்வைக்கப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று பிரச்னையை யோகி அரசு சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு, கங்கை ஆற்றில் பிணங்கள் மிதந்த பிரச்னை, புலம்பெயர்த் தொழிலாளர்களின் தேவைகளைக் கண்டுகொள்ளாதது எனப் பல பிரச்னைகள் ஓராண்டுக்கு முன்பாக விவாதிக்கப்பட்ட அளவுக்கு தற்போது அங்கு விவாதிக்கப்படவில்லை.

ஆளும் பா.ஜ.க-வாக இருந்தாலும், எதிர்க் கட்சிகளான சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியாக இருந்தாலும் முழுக்க முழுக்க சாதிக் கணக்குகளில்தான் மூழ்கியுள்ளன. தற்போது யோகி தலைமையில் ஆட்சியில் இடம்பெற்றிருந்த மூன்று அமைச்சர்கள் பா.ஜ.க-விலிருந்து வெளியேறியுள்ளனர். சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்துள்ள அவர்கள், ஓ.பி.சி எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். யோகி ஆட்சியில் ஓ.பி.சி மற்றும் தலித் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். இதனால், யாதவர் அல்லாத ஓ.பி.சி வாக்குகள் சமாஜ்வாடி கட்சிக்கு பெருமளவில் கிடைக்கும் என்று அகிலேஷ் யாதவ் கணக்குப் போடுகிறார். இதுபோல, ஒவ்வொரு நகர்விலும் அங்கு சாதியை வைத்துத்தான் தேர்தல் கணக்கு கூட்டி கழிக்கப்படுகிறது.

பிரியங்கா, யோகி

உத்தரப்பிரதேசத்தில் சமூகத்திலும், அரசியலிலும், தேர்தலிலும் சாதிகள் எத்தகைய பங்கு வகிக்கின்றன என்பது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். ``எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று தலைவர்கள் மீதான ஈர்ப்பு இங்கு மக்களுக்கு இருப்பதுபோல, வட மாநிலங்களில் கிடையாது. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் சாதி அடிப்படையில்தான் அரசியலில் அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது. பெரும்பான்மையாக இருக்கும் ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தாகூர், ராஜ்புட் ஆகிய இரண்டும் ஒரே சாதிதான். யோகி ஆதித்யநாத் தாகூர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் ஆட்சியில் முக்கிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என பெரும்பாலான முக்கிய பதவிகளில் தாகூர் சமூகத்தினரை அமர்த்தினார். அவர்களை மீறி, அமைச்சர்களாவோ, எம்.எல்.ஏ-க்களாகவோ இருந்த ஓ.பி.சி சமூகத்தினரால் எதையும் செய்ய முடியாத நிலை கடந்த ஐந்தாண்டு காலம் இருந்தது.

பதவிகளில் இருந்தாலும் தங்களை செயல்பட விடவில்லை, தங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை, தாங்கள் விரும்பியது நடக்கவில்லை என்ற கோபமும் எதிர்ப்பும் ஓ.பி.சி-யினர் மத்தியில் இருக்கிறது. ஓ.பி.சி-யினர் மத்தியில் மட்டுமல்லாமல், யோகி ஆட்சிக்கு எதிரான இந்த கோபம் பிராமணர் சமூகத்தினர் மத்தியிலும் இருக்கிறது. யோகி ஆட்சியில் பிராமணர் ஓரம்கட்டப்பட்டார்கள் என்பதுதான் அதற்கு காரணம். ஆகவேதான், அயோத்தியில் போட்டியிட யோகி விரும்பினாலும், அவருக்கு அங்கு வாய்ப்பு தரப்படாமல், கோரப்பூர் தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

யாதவர் அல்லாத ஓ.பி.சி-யினரின் யோகி அரசுக்கு எதிரான கோபத்தை அகிலேஷ் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறார். 8 சதவிகித யாதவர் வாக்குகள் அகிலேஷிடம் உள்ளன. தற்போது யாதவர் அல்லாத பிற ஓ.பி.சி வகுப்பினரையும் தன் பக்கம் இழுப்பதற்கான அனைத்து வேலைகளையும் அவர் செய்துகொண்டிருக்கிறார்.

ரவீந்திரன் துரைசாமி

ஓ.பி.சி வகுப்பினருக்குள் பல அரசியல் இருக்கிறது. அகிலேஷ் யாதவ் ஆட்சியில் இருந்தபோது, எல்லா இடங்களிலும் யாதவ் ஆதிக்கம்தான் இருந்தது. அதனால் கோரி, குர்மி, பிரஜாபதி, ஜாட் உள்ளிட்ட மற்ற ஓ.பி.சி வகுப்பினர் அகிலேஷ் மீது அதிருப்தியில் இருந்தனர். அந்த அதிருப்தியை கடந்த தேர்தலில் பா.ஜ.க அறுவடை செய்தது. தற்போது யோகி ஆட்சியில் ராஜ்புட் ஆதிக்கம் இருப்பதால், அதனால் யாதவர் அல்லாத ஓ.பி.சி-யினரிடம் உருவாகியிருக்கும் யோகி எதிர்ப்பை அகிலேஷ் அறுவடை செய்யப்பார்க்கிறார்.

அதனால்தான், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அகிலேஷ் சொல்கிறார். இதுதான் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க முடியும்.

பிராமணர்களுக்கு ராஜ்புட் மீது அதிருப்தி இருந்தாலும், சித்தாந்த ரீதியில் பா.ஜ.க ஆதரவு மனநிலை கொண்டவர்கள் என்பதால், அவர்கள் பா.ஜ.க-வுடன்தான் இருப்பார்கள். அதுபோல, வைஸ்யா, ஜெய்ஸ்வால், பண்டாரி, குப்தா உள்ளிட்ட வணிக சமூகத்தின் வாக்குகள் 5 சதவிகிதம் இருக்கிறது. இவர்களும் பெரும்பாலும் பா.ஜ.க-வைத்தான் ஆதரிப்பார்கள். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஜாட் சமூகமும், முஸ்லிம்களும் அதிகம். ஜாட் சமூகத்தினர் 13 தொகுதிகளில் பரவலாக இருக்கிறார்கள். தற்போது அந்தப் பகுதியில் அகிலேஷுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஜாதவ், சமர் உள்ளிட்ட தலித் வகுப்பினரில் பி.எஸ்.பி-க்கு செல்வாக்கு இருக்கிறது. பி.எஸ்.பி-க்கு வாக்களிக்காத தலித்துகள் பி.ஜே.பி-யை ஆதரிப்பார்கள்” என்றார் ரவீந்திரன் துரைசாமி.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். ``தென்னிந்தியாவில் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களின் கருத்துக்கள் சமூகத்தில் வேரூன்றியுள்ளன. அவை, மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆனால், வட இந்தியாவில் சாதிய மனோபாவ்ம் மேலோங்கியிருக்கிறது. இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்துக்கள் ஒடுக்கப்பட்டனர், அடக்கப்பட்டனர், மதமாற்றம் செய்யப்பட்டனர் என்ற விஷயங்கள் இப்போதும் உயிர்ப்புடன் பேசப்படுகிறது. அங்கு கல்வியறிவு மிகவும் குறைவு என்பது இதற்கு முக்கியக் காரணம். கல்வியறிவில் தேசிய சராசரியில் தமிழ்நாடு 90-க்கும் மேல் போய்விட்டது. கேரளாவிலோ, அது 98 தசவிகிதம். ஆனால், உ.பி வெறும் 67 சதவிகிதம்தான். எனவே, இன்றைக்கும் அவர்கள் சாதிய வட்டத்துக்குள்ளேயே இருக்கிறார்கள்.

ப்ரியன்

உ.பி-யில் ஆண்டான் அடிமை மனோபாவ்ம் அதிகம். சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகளும் அதிகம். தேர்தல் வருகிறபோது பெரும்பான்மையாக இருக்கும் சாதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிராமணர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பிராமணர்களும் யாதவர் அதிகமாக இருக்கும் பகுதிகளில் யாதவர்களும் என ஒரு பகுதியில் எந்த சாதியினர் அதிகமாக இருக்கிறார்களோ, அந்தப் பகுதியில் அவர்கள் தான் தீர்மான சக்தியாக இருப்பார்கள். அதனால்தான், அங்கு தேர்தலில் சாதி ரீதியான கணக்குகளில் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன.

Also Read: உத்தர் அரசியல்: வெல்லப்போவது யோகியா... அகிலேஷா?! - மினி தொடர் | பகுதி 1

கிழக்கு உ.பி-யில் பா.ஜ.க-வுக்கு ஓரளவு பாதுகாப்பான நிலை இருந்தது. ஆனால் இப்போது, யாதவர் அல்லாத ஓ.பி.சி வகுப்பினர், யோகி எதிர்ப்பு காரணமாக பா.ஜ.க-வுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். மேற்கு உ.பி-யில் ஜாட் சமூகத்தினர் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பா.ஜ.க-வுக்கு எதிர்ப்பு இருக்கிறது.

பிராமணர்கள், முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோரைக் கொண்ட அணியை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி முன்பு கட்டமைத்தார். இப்போது முஸ்லிம்களும் தலித்களில் ஒரு பகுதியினரும் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்து வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க மீதான கோபத்தில் சமாஜ்வாடிக்கு அவர்கள் வாக்களிக்க வாய்ப்பு அதிகம். பட்டியலின சமூகத்தினரை பல இடங்களில் ஒடுக்குமுறைக்கு ஆளாக்குபவர்களாக ராஜ்புட் எனப்படும் தாகூர் சமூகத்தினர் இருப்பதால், அவர்களில் பலர் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இவர்களுக்கு சமாஜ்வாடி கட்சியைப் பிடிக்காது என்றாலும்கூட, பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக சமாஜ்வாதிக்கு வாக்களிக்க வாய்ப்பு இருக்கிறது.

அகிலேஷ்

உ.பி-யில் மக்கள் சாதி ரீதியில் பிரிந்துகிடப்பது தங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள். ஆகவே, சாதியக்கட்டுமானம் சிதையாமல் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். அதனால்தான், கல்வியறிவில் இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாக உ.பி இருப்பதைப் பற்றி அங்குள்ள அரசியல்வாதிகள் யாரும் கவலைப்படுவதே இல்லை” என்கிறார் ப்ரியன்.



from தேசிய செய்திகள் https://ift.tt/33R3Vtu

Post a Comment

0 Comments