மும்பை கல்வா பகுதியில் வசிப்பவர் பப்லு ஓம்பிரகாஷ் பிரஜாபதி. இவர் மனைவி சற்று மனநலம் குன்றியவர் என்று கூறப்படுகிறது. இந்தத் தம்பதிக்கு 10 வயதில் மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்ககு முன்பு சிறுவன் தன் தந்தையின் பணப்பையிலிருந்து 50 ரூபாயை எடுத்து செலவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதையறிந்த ஆத்திரமடைந்த தந்தை பப்லு, அவரை ஆத்திரத்தில் மிகக் கடுமையாக அடித்து உதைத்திருக்கிறார். அப்போதும், ஆத்திரம் தணியாத அவர் சிறுவனின் தலையை சுவரில் ஓங்கி இடித்திருக்கிறார். அதில், சிறுவன் மயங்கி கீழே விழுந்தான். அதைக் கண்டு சற்றும் பதறாத பப்லு, இரவு நேரம் என்பதால் காலை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு, மயக்கமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் அப்படியே போர்வையில் சுற்றி வீட்டில் படுக்க வைத்துவிட்டார்.
அதன் பிறகு எதுவும் நடக்காதது போன்று நடந்து கொண்டார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவம் நடந்து 24 மணி நேரம் கழித்து பப்லு வீட்டுக்கு சென்று சோதனை செய்த போது உள்ளே போர்வையில் சிறுவன் மயங்கிய நிலையில் போரவைக்குள் கிடந்தான். உடனே அவனை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவனின் சகோதரி வீட்டில் நடந்த சம்பவம் குறித்து போலீஸாரிடம் விரிவாக எடுத்து கூறினாள். டாக்டர்கள் சிறுவனை சோதனை செய்தபோது அவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்ததில் சிறுவனின் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதேபோல, தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து பப்லுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: மும்பை: யூடியூப் பார்த்து பைக் திருட்டு; மாணவிகள் முன் பந்தா! - 4 மாணவர்களைக் கைது செய்த போலீஸ்
from தேசிய செய்திகள்
0 Comments