உத்தரபிரதேசம்: பதவியை ராஜினாமா செய்த 3-வது பாஜக அமைச்சர்! - அகிலேஷ் யாதவ் உடன் சந்திப்பு

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், நடைபெற்று வரும் பா.ஜ.க ஆட்சியில், மூன்றாவது அமைச்சராக தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக அண்மையில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாகத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், தற்போது வரை மூன்று அமைச்சர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

முதலாவது நபராக பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுவாமி பிரசாத் மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 5 பேரும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். பிறகு சுவாமி பிரசாத் மவுரியா அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார்.

அமைச்சர் தரம் சிங் சைனி

இதைத்தொடர்ந்து, தாரா சிங் சவுகான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அமைச்சர் தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில், மூன்று அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

அமைச்சர் தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்துள்ளார். இவரும் சமாஜ்வாதி கட்சியில் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 3 அமைச்சர்கள், 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக-வில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/3Ft0OVQ

Post a Comment

0 Comments