கோவா: சொகுசுக் கப்பல் ஊழியருக்கு கொரோனா; தரையிறங்கக் காத்திருக்கும் 2,000 சுற்றுலாப்பயணிகள்!

மகாராஷ்டிராவில் கொரோனா மூன்றாவது அலை பரவல் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் ஒமைக்ரான் பரவலும் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மும்பையிலிருந்து கோவாவுக்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்ட `கொர்டெலியா குரூஸ்' என்ற சொகுசுக் கப்பலிலிருந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதையடுத்து, அவர் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஒமைக்ரான்

கப்பலில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பயணிகள் இருப்பதால், கொரோனா பரவல் அச்சம் காரணமாகக் கப்பலை உடனடியாக கோவாவின் வாஸ்கோ துறைமுகத்தில் நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த மாநில அரசு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் கப்பலில் இருப்பதாகக் கூறி அனுமதி மறுத்தது. அதன் பிறகு நடந்த நீண்டநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு கப்பல் துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்பட்டது. ஆனால், சுற்றுலாப்பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பிறகுதான் பயணிகள் கப்பலிலிருந்து தரையிறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவா அரசு தெரிவித்திருக்கிறது. இது குறித்துச் சம்பந்தப்பட்ட கப்பல் ஏஜென்ட் கோவிந்த் என்பவர் கூறுகையில், ``கப்பலிலிருந்த டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

சொகுசுக் கப்பல்

அதனால், கப்பலிலிருந்த பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். அவை வந்த பிறகுதான் அனைவரும் கப்பலிலிருந்து இறங்க அனுமதிக்கப்படுவார்கள்" என்றார்.

இந்தக் கப்பலில்தான் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பார்ட்டியில் கலந்துகொண்டு கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மகாராஷ்டிரா: ஒமைக்ரான் பரவல் தீவிரம்! - 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments