லக்கிம்பூர் கலவரம்: மத்திய இணை அமைச்சர் மகன்மீது 5,000 பக்கக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டத்திலுள்ள திகுனியா என்ற கிராமத்தில் கடந்த அக்டோபர் மாதம், 3-ம் தேதி மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கார் புகுந்ததில் நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் கோபத்தில் பா.ஜ.க-வினர் மூன்று பேரை, விவசாயிகள் அடித்துக் கொன்றனர். விவசாயிகள்மீது கார் ஏற்றிக் கொன்றது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவை, கடந்த நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் மாற்றி அமைத்து புதிய உறுப்பினர்களைச் சேர்த்து உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகே விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா, அவரின் நெருங்கிய நண்பர் விரேந்திர சுக்லா உட்பட இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ஆஷிஷ் மிஸ்ரா

மூன்று மாதங்களாக நடைபெற்ற விசாரணையில் சிறப்பு விசாரணைக்குழு, குற்றவாளிகள்மீது லக்கிம்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது. மொத்தம் 5,000 பக்கங்களைக்கொண்ட அந்தக் குற்றப்பத்திரிகையில் ஆஷிஷ் மிஸ்ரா முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். விசாரணை அதிகாரி வித்யாராம் இந்தக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தார். அதில் விவசாயிகள்மீது கார் ஏற்றிக் கொன்றது மிகவும் திட்டமிடப்பட்ட ஒன்று என்றும், வேண்டுமென்றே இந்தக் காரியத்தை செய்திருப்பதாகவும், கவனக்குறைவு காரணமாக இது நடக்கவில்லை என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், குற்றவாளிகள்மீது புதிதாகக் கொலை முயற்சி வழக்கான 307-வது சட்டப்பிரிவையும் சேர்க்க வேண்டும் என்று விசாரணை அதிகாரி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இந்தக் குற்றப்பத்திரிகையை கோர்ட் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் விசாரணைத் தேதியை கோர்ட் முடிவு செய்து அறிவிக்கும். இது குறித்து விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர் மொகமத் அமான் கூறுகையில், ``குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நாங்கள் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்தபோது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், குற்றப்பத்திரிகையில் அஜய் மிஸ்ரா பெயர் இடம்பெறவில்லை. நாங்கள் இந்த வழக்கைச் சரியாக விசாரிக்கவில்லை என்றே கருதுகிறோம். விவசாயிகள்மீது மோதிய கார் அமைச்சர் பெயரில் இருக்கிறது. ஆனால் குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் இல்லை. எனவே, சரியாக விசாரிக்க வேண்டும் என்று கோரி கோர்ட்டை அணுக இருக்கிறோம்" என்றார்.

Also Read: லக்கிம்பூர், நாகாலாந்து சம்பவங்கள் முதல் குன்னுர் ஹெலிகாப்டர் விபத்து வரை..! - 2021 India Rewind



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments