நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு; நடிகர் திலீபிற்கு எதிராக ஆடியோ வெளியிட்ட இயக்குநர்!

மலையாள பிரபல நடிகை ஒருவரை காரில் கடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கியிருந்தார் நடிகர் திலீப். இந்த வழக்கில் பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. சுமார் 84 நாள்கள் சிறையிலிருந்த நடிகர் திலீப் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடிகையை காரில் கடத்தியதில் நேரடியாக ஈடுபட்டதாக கூறப்படும் பல்சர் சுனி இப்போது சிறையிலிருக்கிறார். இந்த நிலையில், நடிகர் திலீபிற்கும், பல்சர் சுனிக்கும் தொடர்பு இருப்பதாக பிரபல சினிமா இயக்குநரும், திலீபின் முன்னாள் நண்பருமான பாலச்சந்திரகுமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திலீப் உடன் அவர் வீட்டில் பல்சர் சுனியை பார்த்ததாக இயக்குநர் பாலச்சந்திரகுமார் ஒரு தனியார் டி.வி சேனலில் நேர்காணலின்போது கூறியிருக்கிறார். ஆலுவா சிறையிலிருந்த சமயத்தில் திலீப் தன்னை அழைத்து பல்சர் சுனியுடனான தொடர்பு குறித்து வெளியே கூறக்கூடாது என சொன்னதாகவும், திலீபின் மனைவி காவியாவும் இதுசம்பந்தமாக போனில் பேசியதாகவும் கூறியிருக்கிறார் இயக்குநர் பாலச்சந்திரகுமார்.

சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார்

அதுமட்டுமல்லாது சிறையில் திலீபிற்கு வி.ஐ.பி சலுகை வழங்கப்பட்டதாகவும், சிறை சூப்பிரண்டு அறையில் வைத்து திலீபை சந்தித்துப் பேசியதாகவும் பாலச்சந்திரகுமார் கூறியிருக்கிறார். மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியை திலீப் நோட்டமிட்டதாகவும். பல்சர் சுனி சிறையில் இருப்பதால் அந்த அதிகாரி உயிருடன் இருப்பதாக தான் நம்புவதாகவும் பாலச்சந்திரகுமார் கூறியிருக்கிறார். இதுகுறித்து முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் பாலசந்திரகுமார் அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், திலீப் அவர் உறவினர்கள் மற்றும் நண்பருடன் அவர் வீட்டில் வைத்து உரையாடும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. ஆலுவாவில் உள்ள நடிகர் திலீபின் வீட்டில் வைத்து, 2017 நவம்பர் 15-ம் தேதி திலீப் அவர் சகோதரர் அனூப், சகோதரியின் கணவர் சுராஜ், நண்பர் பைஜூ ஆகியோருடன் பேசும் தனிப்பட்ட சில ஆடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த ஆடியோவில், நடிகை கடத்தல் வழக்கில் தனக்கு பங்கிருப்பதாகவும், அதில் ஈடுபட்ட சிலரை காப்பாற்றியதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த ஆடியோவை இயக்குநர் பாலச்சந்திரன் பதிவு செய்து இப்போது வெளியிட்டிருக்கிறார்.

திலீப்

திலீப் பேசுவதாக வெளியான அந்த ஆடியோவில், ``இது நான் அனுபவிக்க வேண்டியது அல்ல. வேறொரு பெண் அனுபவிக்க வேண்டியது. அவரை காப்பாற்றி, காப்பாற்றி கொண்டுபோனதால் நான் தண்டிக்கப்பட்டேன்" எனக்கூறுவதுடன், பல்சர் சுனிக்கு பூப்போல ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்ததாகவும் திலீப் பேசியிருக்கிறார். ``திலீப் க்ரைம் செய்தால் அதை கண்டுபிடிப்பது கஷ்டம்" என மற்றொரு ஆடியோவில் திலீப் பேசியிருக்கிறார். திலீப் 84 நாள்கள் சிறையிலிருந்து விட்டு வெளியே வந்த சமயத்தில் அவர்கள் பேசிய ஆடியோக்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஆடியோக்களுக்கு தான் சாட்சி எனவும் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். இதுசம்பந்தமாக திலீப் தரப்பில் பதில் கருத்து எதுவும் கூறப்படவில்லை.

Also Read: கேரளா: கொரோனா பாதித்த இளம் பெண்... ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை! - சிக்கிய ஓட்டுநர்



from தேசிய செய்திகள் 

Post a Comment

0 Comments