⚖️ கர்நாடகாவின் மதமாற்ற தடைச்சட்டம் சரியானதா?

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Exclusive Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸிற்கே வந்துசேரும்!

கர்நாடக அரசு நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கல் செய்திருக்கும், மதச்சுதந்திர பாதுகாப்பு மசோதா 2021, அம்மாநிலம் மட்டுமன்றி, நாடு முழுக்கவே விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது; அம்மாநில எதிர்க்கட்சிகள் உள்பட நாடு முழுவதும் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. என்ன பிரச்னை இதில்? ஏன் இதை எதிர்க்கிறார்கள்?

என்ன சொல்கிறது இந்த மசோதா?

கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றங்களைத் தடைசெய்வதும், வலதுசாரிகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படும், `லவ் ஜிஹாத்’ என்ற மதமறுப்பு திருமணங்களையும் கட்டுப்படுத்துவதும்தான் இந்த மசோதாவின் நோக்கம்.

  • இந்த மசோதாவின் பிரிவு 3-ன் படி, ஒருவரை ஏமாற்றியோ, கட்டாயப்படுத்தியோ, ஆசைகாட்டியோ, வன்முறையைப் பிரயோகித்தோ, திருமணம் செய்தோ, ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றினால், அது சட்டவிரோதம். இதை செய்பவருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ₹25,000 அபராதமும் விதிக்கப்படும்.

  • இதில் மதம் மாற்றப்படுபவர் சிறாராகவோ, மனநலம் குன்றியவராகவோ, பட்டியலின அல்லது பழங்குடியினராகவோ இருந்தால், சிறைத்தண்டனை 10 ஆண்டுகள் வரைகூட நீட்டிக்கப்படலாம். கூடவே, ₹25,000 அபராதமும்!

  • இந்த மதமாற்றம் குறித்து மதம் மாறியவர்களின் உறவினர்கள் மட்டுமல்ல; உடனிருப்பவர்கள், பணியிட நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் காவல் துறையில் புகார் அளிக்கமுடியும். இந்த மதமாற்றம், ஜாமீனில் வரமுடியாத குற்றமாக கருதப்படும்.

அப்படியெனில் எப்படி ஒருவர் மதம் மாற முடியும்?

அதற்கு இந்த மசோதா கூறும் வழிமுறை இதுதான்….

  • மதம் மாற விரும்புபவர், மதம் மாறுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, அதற்கு 30 நாள்கள் முன்பாகவே மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் தகவல் தெரிவிக்கவேண்டும். அவர் அந்த விவரங்களை மாஜிஸ்திரேட் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகத்தின் நோட்டீஸ் போர்டில் வெளியிட்டு, யாருக்கேனும் ஆட்சேபனை இருக்கிறதா எனக் கேட்பார். 30 நாள்களுக்குள் ஏதேனும் புகார்கள் வந்தால், வருவாய்த்துறையினர் சார்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுவார். அதில், மேற்கண்ட வழிகளில் மதமாற்றம் நடப்பது தெரியவந்தால், அது குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எந்தப் புகாரும் வரவில்லையெனில், மதமாற்றம் செய்யலாம்.

  • இந்த விதிமுறைகளைத் தவிர்த்துவிட்டு யார் மதம் மாறினாலும், அது செல்லாது; அவர்கள்மீது, வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

  • இந்த மதமாற்றமானது, முறையற்ற வழிகளில் நடக்கவில்லை என்பதை, மதமாற்றம் செய்ய உதவும் நபரோ அல்லது செய்துவைக்கும் நபரோதான் நீதிமன்றத்தில் நிரூபிக்கவேண்டும். மதம் மாறியவரோ, அரசோ அதைச் செய்யவேண்டியதில்லை. மதம் மாறும் நபரின் சம்மதம் மட்டுமே இதற்கு போதாது.

இவையெல்லாம்தான் இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்.

இந்த சட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்?

கர்நாடக மாநில எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல; இதுபோன்ற மதமாற்ற தடுப்பு சட்டங்களை நாடு முழுவதுமுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். அதற்கு அவர்கள் முக்கியமாகக் குறிப்பிடும் விஷயங்கள்,

  • இது மக்களின் மத சுதந்திரத்தைப் பறிக்கிறது;

  • திருமணம், கடவுள் நம்பிக்கை உள்ளிட்ட அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அரசு மூக்கை நுழைக்க உதவுகிறது.

  • மேலும், இந்த சட்டங்கள் நம் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமைகளுக்கே விரோதமானது என்பது அவர்களின் வாதம்.

அரசாங்கங்கள் இதுபோன்ற சட்டங்களை ஏன் கொண்டு வருகின்றன?

பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், இமாசலப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அண்மையில், மதமாற்று தடுப்புச்சட்டங்கள் அரசியல் பிரச்னைகளாக கையில் எடுக்கப்பட்டு, இவை மதவெறுப்பு பிரசாரத்தின் ஒருபகுதியாகவே கையாளப்படுகின்ற்ன.

  • ஆனால், இந்தியாவின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இதுபோன்ற மதமாற்று தடுப்புச்சட்டங்கள் சுதந்திரத்திற்கு முன்பே பல மாகாணங்களில் இருந்திருக்கின்றன.

  • சுதந்திரத்திற்குப் பிறகு, நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான மதமாற்று தடுப்புச்சட்டங்களைக் கொண்டுவரும் முயற்சிகளும்கூட (1954 & 1960) நடந்திருக்கின்றன. ஆனால், அவை கைகூடாத நிலையில்தான், மாநில அரசுகள் இவற்றைக் கையில் எடுத்தன.

  • முதன்முதலாக ஒடிசா அரசு, 1967-ல் ஒரு மதமாற்று தடைச்சட்டத்தை இயற்றியது.அதற்கடுத்த வருடம் 1968-ல் மத்தியப் பிரதேசமும் ஒரு சட்டம் இயற்றியது. பின்னர் சட்டிஸ்கர், அருணாச்சலப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட் எனப் பல மாநிலங்களும் இதே ரூட்டில் பயணிக்கத் தொடங்கின.

  • இதில் பல மாநிலங்களின் முதன்மை நோக்கமாக இருந்தது, பழங்குடியினர் மற்றும் ஏழை மக்கள் கிறிஸ்துவத்தை நோக்கி சென்றுவிடக்கூடாது என்பதே. ஆரம்பத்தில் இதற்காக மட்டுமே கொண்டுவரப்பட்ட மதமாற்று தடைச் சட்டங்கள், லவ் ஜிஹாத், மதம் மாறி செய்துகொள்ளும் திருமணங்கள் ஆகியவை அரசியல் பிரச்னைகளாக்கப்பட்டதற்குப் பிறகு, அவற்றையும் உடன் சேர்த்துக்கொண்டன.

  • இப்படித்தான், அண்மையில் இயற்றப்பட்ட உத்தரப்பிரதேச சட்டமும், தற்போது கர்நாடகா கொண்டுவந்திருக்கும் மசோதாவும் தனிநபர்களின் பல்வேறு விஷயங்களில் தலையிடுகின்றன.

நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்துமா?

  • மேலும், பழைய மாநில மதமாற்றுச் சட்டங்களுக்கும், இதற்கும் இருக்கும் இன்னொரு வேறுபாடு, 2017-ல் பிரைவசி மக்களின் அடிப்படை உரிமை என வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

  • திருமணம், மதம் ஆகியவற்றில் தலையிடும் அரசின் இதுபோன்ற சட்டங்கள் தனிநபர்களின் பிரைவசியை மீறுபவை; ஆனால், பழைய மதமாற்று தடுப்புச்சட்டங்கள் தொடர்பாக வழங்கப்பட்ட பழைய தீர்ப்புகள் பலவும், இதை கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால், நீதிமன்றங்கள் இனியும் அப்படி இருக்கமுடியாது. பிரைவசி விஷயத்தில் நிச்சயம் கூடுதல் செலுத்தவேண்டும்; அப்படியிருக்கையில் இதுபோன்ற சட்டங்கள் நீதிமன்றத்தின் பிடியிலிருந்து தப்பிக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  • தண்டனைகள் அளவில், விதிமுறைகள் அளவில், இதுவரை இயற்றப்பட்ட மதமாற்று தடைச்சட்டங்களிலேயே கர்நாடக மாநிலத்தின் இந்த மசோதாதான் மிகக் கடுமையானது. நாடு முழுக்க இந்த மசோதா கவனம்பெற இதுவும் ஒரு காரணம்.

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Exclusive Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸிற்கே வந்துசேரும்!

Also Read: மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்; ஜனவரி 1-க்குப் பிறகு என்னாகும்?



from தேசிய செய்திகள் 

Post a Comment

0 Comments