மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மகனுக்குக் கொலை மிரட்டல் - பெங்களூரில் வாலிபர் கைது!

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராகப் பதவி வகித்துவருகிறார். அவர் தன் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்த்திருக்கிறார். ஆதித்ய தாக்கரே விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார். மாநிலத்தில் அதிக நேரங்களில் ஆதித்ய தாக்கரேதான் தன் தந்தைக்கு பதில் முக்கிய அதிகாரிகளையும் அமைச்சர்களையும் அழைத்து ஆலோசனை நடத்துகிறார். இப்போதுகூட, உத்தவ் தாக்கரே அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய்வுவெடுத்துவருகிறார். எனவே அவர் பணிகளை ஆதித்ய தாக்கரேதான் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், ஆதித்ய தாக்கரேவுக்கு மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். வாட்ஸ்அப் மூலம் அந்த மர்ம நபர் ஆதித்யாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து உடனே ஆதித்ய தாக்கரே போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர். இதில் மிரட்டல் விடுத்த நபர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அதையடுத்து, உடனே தனிப்படை போலீஸார் பெங்களூருக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்த நபரைக் கைதுசெய்தனர்.

ஆதித்ய தாக்கரே

கொலை மிரட்டல் விடுத்த அந்த நபரின் பெயர் ஜெயசிங் ராஜ்புத் என்று தெரியவந்தது. ராஜ்புத்தை போலீஸார் பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோர்ட் ஒப்புதலுடன் மும்பைக்கு அழைத்து வந்திருக்கின்றனர். மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தான் முதலில் ஆதித்ய தாக்கரேவுக்கு போன் செய்ததாகவும், ஆனால் அவர் போனை எடுத்துப் பேசவில்லை என்பதால் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

கைது

ராஜ்புத் முதலில் ஆதித்ய தாக்கரேவுக்கு, வாட்ஸ்அப்பில் `நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை ஆதித்ய தாக்கரேதான் கொலை செய்துவிட்டதாக’ மெசேஜ் அனுப்பினார். அதற்கு ஆதித்ய தாக்கரே எந்த பதிலும் அளிக்கவில்லை. அதன் பிறகே போனில் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார் என்று போலீஸார் தெரிவித்தனர். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு, ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலை குறித்து சி.பி.ஐ விசாரித்துவருகிறது. இந்த நிலையில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: ``உத்தவ் தாக்கரே உடல்நிலை சரியாகும் வரை முதல்வர் பதவியை அவர் மகனிடம் கொடுங்கள்" - பாஜக அறிவுரை!



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments