நடிகர் ஷாருக் கான் மகன், ஆர்யன் கான் கடந்த அக்டோபர் தொடக்கத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் அக்டோபர் இறுதியில் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் விடுதலை செய்யப்படும் போது ஆர்யன் கானும் அவருடன் கைது செய்யப்பட்ட அவர் நண்பர்களும் விசாரணைக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி சம்ப்ரே நிபந்தனை விதித்திருந்திருந்தார்.
ஆர்யன் கான் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்கு வரும் போது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கூடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. அதோடு ஏராளமான போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையடுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று கோரி ஆர்யன் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்யன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித்தேசாய், ``என் மனுதாரர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதிகாரிகள் அழைக்கும் நேரத்தில் ஆஜராகிறார். தற்போது விசாரணையை டெல்லி அதிகாரிகள் நடத்துகின்றனர். அவர்கள் விசாரணைக்காக டெல்லியிலிருந்து மும்பை வந்தால் அவர்கள் முன்பு ஆஜராக தயாராக இருக்கிறார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும் போது, அதிக அளவில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆர்யன் கான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பதன் மூலம் ஆர்யன் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு வேறு பணிகளை ஒதுக்க முடியும்" என்று வாதிட்டார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீராம், ஜாமீன் நிபந்தனையை தளர்த்துவதில் எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ஒவ்வொரு வாரமும் ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.
Also Read: `ஒவ்வொரு வாரமும் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்!’ - ஆர்யன் கான் கோரிக்கை
from தேசிய செய்திகள்
0 Comments