2021 ரிவைண்ட்: உள்ளூர் முதல் சர்வதேசம் வரை... தேர்தல்கள் ஒரு பார்வை! 2021 Rewind

உகாண்டா அதிபர் தேர்தல் 2021 :

உகாண்டாவில் அதிபரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களை (MP) தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 14 ஜனவரி 2021 அன்று நடைபெற்றது. 1986-ம் ஆண்டு முதல் நாட்டை ஆட்சி செய்து வரும் தற்போதைய ஜனாதிபதியும் NATIONAL RESISTANCE MOVEMENT-ன் தலைவருமான யோவேரி முசெவேனியும்(Yoweri Museveni), அவரை எதிர்த்து முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் NATIONAL UNITY PLATFORM-ஐ சேர்ந்த பாபி வைனும் (Bobi Wine) களம் கண்டனர். உகாண்டா அரசியலமைப்பு சட்டப்படி, மொத்தமுள்ள 529 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு 265 இடங்கள் பெறுவது அவசியம். இந்தத் தேர்தலில் பதிவான 10,744,319 வாக்குகளில் 6,042,898 (59%) வாக்குகள் பெற்ற யோவேரி முசெவெனி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தேர்தலில் NATIONAL RESISTANCE MOVEMENT கட்சியானது 336 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், 2016-ல் நடைபெற்ற தேர்தலில் பெற்றதை விட 43 தொகுதிகள் அதிகம் பெற்றது.

யோவேரி முசெவேனி

முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய வைன், ``உகாண்டாவின் வரலாற்றில் இது மிகவும் மோசடியான தேர்தல்" என்று குற்றம்சாட்டினார். முசெவேனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் தொலைக்காட்சி உரையில் இந்தக் கூற்றுக்களை மறுத்தார், வாக்குகள் இயந்திரத்தால் எண்ணப்பட்டதாகவும், ``1962-க்குப் பிறகு இது மிகவும் மோசடி இல்லாத தேர்தலாக மாறக்கூடும்" என்றும் கூறினார். முசெவெனியை, 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து செய்யாததை இந்த ஆட்சிக்காலத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, ஆப்பிரிக்காவில் பொருளாதார ஒருங்கிணைப்பிற்காகவும், கடினமாக உழைக்காத உகாண்டா கலாசாரத்தை மாற்றவும் தான் விரும்புவதாக அவர் கூறினார்.

சிலி அதிபர் தேர்தல் 2021 :

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மற்றும் 1.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட சிலி நாட்டின் அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று இந்தாண்டு நவம்பர் 21-ல் நடைபெற்றது. 7 அதிபர் வேட்பாளர்களை கொண்டு தொடங்கிய முதல் சுற்றில் REPUBLICAN கட்சியின் தலைவர் ஜோஸ் அண்டோனியோ கஸ்ட் (JOSE ANTONIO KAST) 27.91% வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். ஆனால், இவர் பெரும்பான்மையான வாக்குகள் பெறாத காரணத்தால் 2-வது சுற்று நடைபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கேப்ரியல் போரிக் | Gabriel Boric

சிலி நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி, முதல் சுற்றில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை (50%) பெறவில்லையெனில், 2-வது சுற்று நடைபெறும். அதன்படி, டிசம்பர் 19, 2021 அன்று 2-வது சுற்று நடைபெற்றது. 2-வது சுற்றில் ஜோஸ் அண்டோனியோவும் SOCIAL CONVERGENCE கட்சி தலைவர் கேப்ரியல் போரிக்கும் (GABRIEL BORIC) போட்டியிட்டனர். இரண்டாவது சுற்றின் முடிவில் கேப்ரியல் போரிக் (GABRIEL BORIC) 4,615,090 (55.87%) வாக்குகள் பெற்று சிலி நாட்டின் அதிபரானார். தற்போது வரை நடந்த தேர்தல்களில், சிலி நாட்டில் 2-வது சுற்று வேட்பாளர்கள் இருவரும் வரலாற்று ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் கூட்டணியில் இருந்து வராதது இதுவே முதல் முறை.

Also Read: 80ஸ் கிட், மாணவர் தலைவர், மனநலப் பிரச்னை... சிலியின் புதிய அதிபர் கேப்ரியல் போரிக்கின் கதை தெரியுமா?

ஈரான் அதிபர் தேர்தல் 2021 :

59 மில்லியன் வாக்காளர்களை கொண்ட ஈரான் நாட்டின் 13-வது அதிபர் தேர்தலானது 18 ஜூன் 2021 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 28 மில்லியன்(48.48%) வாக்காளர்களே ஓட்டு பதிவு செய்தனர். இது 2017-லில் நடைபெற்ற தேர்தலை காட்டிலும், 24.85% குறைவாகும். 2017-ல் 73.33% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. அதிபர் வேட்பாளராக களம் கண்ட 4 வேட்பாளர்களில், COMBATANT CLERGY ASSOCIATION-ஐ சேர்ந்த இப்ராஹிம் ரைசி (EBRAHIM RAISI) என்பவர் பதிவான மொத்த வாக்குகளில் 18 மில்லியன் வாக்குகள் பெற்று அதிபரானார்.

ஈரான் அதிபர்

பாதுகாப்பு மன்றத்தின்(GUARDIAN COUNCIL) மூலம் நிர்வகிக்கப்படும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் (EMA), பதிவு செய்யப்பட்ட வேட்பாளர்களில் தேர்தலில் போட்டியிட ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்தது. இந்தத் தேர்தலில் பெண் வேட்பாளராக பதிவு செய்த எவரும் தேர்தலில் நிற்க பாதுகாப்பு மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது குறித்து விளக்கமளித்த மன்றத்தின் செய்தித்தொடர்பாளர், "ஒரு பெண் என்பதால் நாங்கள் எவரையும் நிராகரிக்கவில்லை" என்று கூறினார். மேலும், தேர்தலில் பெண்கள் பதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கஜகஸ்தான் நாடாளுமன்ற கீழ் சபை தலைவர் தேர்தல் 2021 :

கிட்டத்தட்ட 11 மில்லியன் வாக்காளர்களை கொண்ட கஜகஸ்தானின் 8-வது நாடாளுமன்ற கீழ் சபை தலைவர் தேர்தலானது இந்தாண்டு 10 ஜனவரி அன்று நடைபெற்றது. நுர்சுல்தான் நாசர்பேயேவ் (NURSULTAN NAZARBAYEV), அசாத் பெர்யுஷேவ்(AZAT PERYUSHEV) மற்றும் ஐகுன் கின்ஜிரோவ்(AIQYN QONGYROV) ஆகியோர் போட்டியிட்ட இந்த தேர்தல் தான், காசிம்-ஜோமார்ட் டோகாயேவின் (கஜகஸ்தானின் ஜனாதிபதி) தலைமையின் கீழ் நடைபெறும் முதல் தேர்தலாகும். மேலும், 2004-க்கு பிறகு நாடாளுமன்றத்தின் கீழ் சபையினால் (MAGILIS-மஜிலீஸ்) கலைக்கப்படாமல், குறித்த தேதியில் நடந்த தேர்தலும் இதுவே.

கஜகஸ்தான் ஜனாதிபதி

இந்த தேர்தலில் நூர் ஓட்டன் கட்சி தலைவர் நுர்சுல்தான் நாசர்பேயேவ், பதிவான 7 மில்லியன் வாக்குகளில் 5 மில்லியன் வாக்குகள் அதாவது 71.09% வாக்குகள் பெற்று, கஜகஸ்தான் நாடாளுமன்ற கீழ் சபையின் தலைவரானார். நூர் ஒட்டன் (NO) கட்சி 71.1% வாக்குகளை வென்று 76 இடங்களை கைப்பற்றி நாடாளுமன்ற கீழ் சபையில் அதன் மேலாதிக்க கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும், இந்த கட்சி கடந்த தேர்தலை விட, 11.8% வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது. மேலும், 2012 முதல் நாடாளுமன்ற கீழ் சபை தேர்தலில் பங்கேற்று வரும் Ak Zhol Democratic கட்சியும் மற்றும் People's Party of Kazakhstan கட்சியும் தலா 2% வாக்குகள் அதிகம் பெற்றுள்ளன. மஜிலிஸ் என்பது கஜகஸ்தான் நாடாளுமன்ற கீழ் சபையை குறிக்கும். மேல்சபை செனட் என்று அழைக்கப்பெறும்.

ஈக்வடார் அதிபர் தேர்தல் 2021 :

ஈக்வடாரில் கோவிட் 19 காரணமாக பிப்ரவரி 7, 2021-ல் நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிப்போகும் என்று வதந்தி பரவிய நிலையில், அந்நாட்டு தேர்தல் ஆணையம் சொல்லப்பட்ட தேதியில் தேர்தல் உறுதியாக நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி, நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று பிப்ரவரி 7, 2021 நடைபெற்றது. 2017 முதல் ஈக்வடாரின் அதிபராக இருந்த லெனின் மொரேனோ(PAIS) இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. முதல் சுற்றில் வேட்பாளர்களாக களம் கண்டவர்களில் CREATING OPPORTUNITIES (CREO) கட்சியின் நிறுவனரான கில்லர்மோ லாஸோவும் (Guillermo Lasso) , UNION OF HOPE(UNES) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்த ஆண்ட்ரிஸ் அரஸும்(Andrés Arauz) இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

கில்லர்மோ லாஸோ

ஏப்ரல் 11, 2021 அன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பதிவான 8,892,941 வாக்குகளில் 4,656,426 (52.21%) வாக்குகள் பெற்ற கில்லர்மோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அந்நாட்டின் 24 மாகாணங்களுள் 17 மாகாணங்களில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய ஆண்ட்ரிஸ் அரஸ் இரண்டாவது சுற்றில் 4,236,515 (47.64%) வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். பெரும்பாலான கருத்து கணிப்புகளில் ஆண்ட்ரிஸ் அரஸ் தான் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் கில்லர்மோ லாஸோ வெற்றி பெற்றது அனைத்து ஊடகங்களுக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தல் - மார்ச் 27- ஏப்ரல் 6

அஸ்ஸாமின் 15-வது சட்டமன்றத் தேர்தல் , மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 என மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 126 எம்.எல்.ஏ-க்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற இந்தத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு , முடிவானது மே 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்தலில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ), 75 இடங்களுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் (INC) அல்லாத கூட்டணி , மாநிலத்தில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவது, இதுவே முதல் முறையாகும். INC தலைமையிலான மகாஜோத் 50 இடங்களை வென்றது.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

2016-ல் அதன் எண்ணிக்கையான 26-ல் இருந்து இந்த முறை அதிக இடங்கள் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சிறையில் அடைக்கப்பட்ட ஆர்வலரும், ரைஜோர் தள நிறுவனரும், தலைவருமான அகில் கோகோய் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 11,875 வாக்குகள் வித்தியாசத்தில் சிப்சாகர் தொகுதியில் வெற்றி பெற்றார். 2021-க்கு முன்பாக 2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், 2001 முதல் தருண் கோகோய் தலைமையில் அரசாங்கத்தை அமைத்த இந்திய தேசிய காங்கிரஸை (INC), சர்பானந்தா சோனோவால் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையை கைப்பற்றி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2வது முறையாக இந்த ஆண்டும் ஆட்சியைப் கைப்பற்றி இருக்கிறது.

கேரளா சட்டமன்றத் தேர்தல் - ஏப்ரல் 6

15-வது கேரள சட்டப் பேரவைக்கு 140 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2021 கேரள சட்டமன்றத் தேர்தல் 6 ஏப்ரல் 2021 அன்று நடைபெற்றது. மே 2-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (LDF) 99 இடங்களுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. முந்தைய தேர்தலை விட 8 இடங்கள் அதிகம் கைப்பற்றியுள்ளது . 1977 தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில், ஒரு கூட்டணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

பினராயி விஜயன்

ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மீதமுள்ள 41 இடங்களை வென்றது. முந்தைய தேர்தலை விட 6 இடங்கள் குறைவாக கைப்பற்றியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) தனித் தொகுதியில் தோல்வியடைந்ததால் எந்த இடத்திலும் வெற்றிபெற முடியவில்லை. கேரளாவில் ஐந்தாண்டு காலம் முழுவதுமாக பதவி வகித்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதலமைச்சராக பினராயி விஜயன் ஆனார்.

புதுச்சேரி - ஏப்ரல் 6 :

இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள சட்டமன்றத்தின் 30 தொகுதிகளிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பதினைந்தாவது சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6, 2021 நடைபெற்றது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ரங்கசாமியை தலைவராக கொண்டு தேர்தலைச் சந்திந்து 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10, பா.ஜ.க 6 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றின.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

கூட்டணிக்குத் தலைவராக இருந்த ரங்கசாமி சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் புதுச்சேரியில் நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்கும் முதல் நபர் என்ற தனிச் சிறப்பை ரங்கசாமி பெற்றார்.

தமிழ்நாடு - ஏப்ரல் 6

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளின் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய ஏப்ரல் 6, 2021 தேர்தல் நடைபெற்றது. இது தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்றத் தேர்தல் ஆகும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் எட்டாவது முதல்வராகவும், 1956 மறுசீரமைப்புக்குப் பிறகு 12-வது முதல்வராகவும் பதவியேற்றார். இரண்டு முக்கிய தலைவர்களான மு.கருணாநிதி மற்றும் ஜெ .ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் இது. தி.மு.க சார்பில் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அ.தி.மு.க சார்பில் முதல்வர் வேட்பாளராக ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரில் யார் தேர்ந்தெடுக்கபடுவர் என்ற குழப்பம் நிலவியது .

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பின்னர் ஒருமனதாக எடப்பாடி முதல்வர் வேட்பாளரென அறிவிக்கப்பட்டார். சீமானின் நாம் தமிழர், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், பாட்டாளி மக்கள் கட்சி என பிற கட்சிகள் பிரசாரத்திலும், தேர்தல் களத்திலும் சமமாக போட்டியிட, இறுதியில் பெரும்பான்மையைக் கைப்பற்றி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியமைத்தது. மாநிலத்தில் 72.81% வாக்குகள் பதிவாகின. வாக்குகள் 2 மே 2021 அன்று எண்ணப்பட்டன. 159 இடங்களில், தி.மு.க மட்டும் 133 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையைக் கைப்பற்றியது . 66 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்று எதிர்கட்சியானது . தமிழகத்தில் ஆறாவது முறையாக தி.மு.க ஆட்சி அமைத்தது. 25 ஆண்டுகளில் தி.மு.க தனிப்பெரும்பான்மை பெற்றதும் இதுவே முதல்முறையாகும்.

Also Read: மேற்கு வங்கத்தில் எடுபடாமல் போன பாஜகவின் வியூகம்.. அடித்து நொறுக்கிய மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கம் - 27 மார்ச்- 29 ஏப்ரல்

மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் 2021 மார்ச் 27 முதல் 29 ஏப்ரல் 2021 வரை எட்டு கட்டங்களாக நடைபெற்றது . மீதமுள்ள இரண்டு தொகுதிகளுக்கான வாக்களிப்பு 30 செப்டம்பர் 2021-க்கு தாமதமானது. மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் அரசு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கருத்துக் கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக நெருங்கிய போட்டியை கணித்திருந்தாலும், அது 77 இடங்களுடன் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக மாறியது. சஞ்சுக்தா மோர்ச்சா ஒரு இடத்தை தனதாக்கினார்.

மம்தா பானர்ஜி

இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. பானர்ஜி நந்திகிராமில் போட்டியிட்டார், ஆனால் சுவேந்து அதிகாரியிடம் தோற்றார். அவருடைய வெற்றி சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இது மேற்கு வங்கத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தல் ஆகும் .



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments